பனைநிலத் தமிழ்ச் சங்கமானது அமெரிக்காவில் இயங்கும்தமிழ்ச் சங்கங்களுள் சிறியதொரு தமிழ்ச் சங்கம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (தை மாதம் 2003ஆம் ஆண்டு) இருபதுக்கும் குறைவான தமிழ் குடும்பங்கள் இணைந்து இது ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்களின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றான பனைமரங்கள் விளைந்து செழிப்பதால் பனைநிலம் (Palmetto State) என்று அழைக்கப்படும் தென் கரோலினா மாநிலத்தில் நாங்கள் வசிப்பதால் எங்கள் சங்
கத்திற்குப் “பனைநிலத் தமிழ்ச்சங்கம்’ என்று பெயர் சூட்டினோம். சாதி, மதம், நாடுகளை க் கடந்து தமிழால் ஒன்றிணைந்து தமிழர் மற்றும் தமிழின் மீது பற்றுக்கொண்ட யாவரையும் இணைத்து தமிழ் மொழி, இனம், பண்பாடு, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கலை ஆகியவற்றை இங்கே பரப்புவதுடன், நமது பண்பாட்டின் மொத்தக் கூறுகளையும் அடுத்த தலைமுறைக்கு முறையாகப் பயிற்றுவிக்கும் பட்டறையாகவும் விளங்குவதே எங்கள் சங்கத்தின் நோக்கம்.
அதன் பொருட்டு இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பாடத்தை முறையாக அமெரிக்கக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்தி வருகின்றோம். மேலும் உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூல் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்துவதுடன் சிறியவர்களுக்கு எளிதில் மனனம் ஆகும் வகையில் 1330குறட்பாக்களையும் முதன் முதலாக இசை வடிவில் உருவாக்கி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மூலமாக அனைத்துச் சங்கங்களையும் சென்றடையச் செய்துள்ளோம். SRM பல்கலைக் கழகத்தில் இயங்கும் தமிழ்ப்பேராயம் இதனைப் பாராட்டி இந்தக் குறுந்தகட்டைத் தமிழகத்தில் வெளியிட்டது. திருக்குறளில் அதிகக் கவனம் பெறாத காமத்துப்பாலிலிருந்து சில குறட்பாக்களைத் தேர்வு செய்து ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கத்துடன் மேற்கத்திய இசை பாணியில் வெளியிட்டது எங்களது மற்றுமொரு புது முயற்சி. மேலும் குழந்தைப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களையும் இசைக் குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாக்களில் தெருக்கூத்து, பறை இசை, சிலம்பம், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்றவற்றை அரங்கேற்றிப் பலரது பாராட்டையும் பெற்றோம். பல கலைஞர்களை பேரவை மூலமாக அமெரிக்க மண்ணிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம். குறிப்பாக அமெரிக்க மண்ணில் முதன் முதலாக அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கவனகக்கலையை முனைவர். கலை செழியன் அவர்களும், சிலம்பக்கலையை திரு. ஜோதி கண்ணன் அவர்களும், பறை இசை மற்றும் தப்பாட்டத்தை திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரும் நிகழ்த்தியது அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், எமது பிள்ளைகளுக்கும் நமது கலைகளில் மேல் ஒரு ஈர்ப்பையும் மதிப்பையும் ஆர்வத்தையும் உணர்வையும் ஊட்டியது. மிகச் சிறிய சங்கமாக இருந்தபோதிலும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24வது ஆண்டுவிழாவை 2011ம் ஆண்டு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்பனைநிலத்தில் நடத்தினோம். தமிழ்-அறிவியல் கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், உலகக் கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளூர் நற்பணிகள், நடைப் பயணங்கள் எனப் பல வழிகளிலும் ஆர்வமாக இயங்கி வருகிறது எங்கள் சங்கம். தமிழுக்கான மையம் ஒன்றினை உள்ளூரில் அமைக்கும் நோக்கில் எங்கள் தமிழ்ச் சங்கத்திற்கென்று ஒரு சிறிய நிலத்தையும் வாங்கியுள்ளோம். எங்கள் பனை நிலத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இதுவரை நடிகர்கள் திரு நாசர் மற்றும் திரு சார்லி, கவிஞர்கள் திரு. அறிவுமதி, திரு. முத்துக்குமார், திரு. முல்லை நடவரசு, பேராசியர்கள் திரு சுப. வீரபாண்டியன், திரு. மு.இளங்கோவன், திருமதி. புனிதா ஏகாம்பரம், திரு. சிலம்பொலி செல்லப்பன் போன்றோர் வந்து சிறப்பு செய்துள்ளார்கள். இவ்வாறாக உலகின் மூத்த செழுமையான செம்மொழியாம் தமிழின் அறிவுப் பெட்டகங்கள் தமிழரையும் உலக மாந்தரையும் சென்றடையச் செய்யும் ஒரு கூர்மையான கருவியாகச் செயற்பட்டு வருகிறது எங்கள்பனைநிலம் தமிழ்சங்கம். வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் புகழ்!