02/10/2026
முதலாம் ஆண்டு
வாழ்த்துச் செய்தி
பல இன, கலாசார சூழல் நிறைந்த சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம்களுக்கென்றே உள்ள தனித்துவத்தை உணவு மூலம் பறை சாற்றும் குழுவினரில் ஒப்பிலானை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரர்கள் பிரபலமானவர்கள்.
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் உணவங்காடி நிலையங்களில் கோலோச்சும் இவர்கள், இந்திய, மலாய் உணவு வகைகளை இணைத்தும் சுவையோடு வழங்குகிறார்கள்.
பல இன, பல நாட்டு மக்களும் இவர்கள் தயாரிக்கும் சுவையான உணவு வகைகளை ருசித்துப்பார்க்கத் தவறுவதில்லை. அவர்களின் கடைகளைத் தேடி வருகிறார்கள்.
1970 களில், நான் மாணவனாக இருந்த காலகட்டத்தில், ஆன்சன் ரோட்டில் குடியிருந்தேன். ஷெண்டன் வே பகுதியில் இரவு நேர அங்காடி கடை நடத்தி வந்த ஒப்பிலானைச் சேர்ந்த மெய்தீன் பிச்சை என்பவரின் கடையைத் தேடிச் சென்று அவர் தயாரித்துத்தரும் மீ கோரிங், பீஃப் ஸ்டிக் உணவு வகைகளை ருசித்து சுவைத்ததை இன்றும் கூட மறக்க முடியவில்லை.
சிங்கப்பூரில் உணவுத் துறையில் நன்மதிப்பை பெற்று உயரிய நிலையை, பொருளாதார ரீதியிலும் அடைந்துள்ள இவர்கள், தங்களின் அடுத்த தலை முறையினருக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தி நல்ல தேர்ச்சியடையவும் வைத்திருக்கிறார்கள்.
ஒப்பிலானை பூர்வீகமாகக் கொண்ட அவர்களுக்கு கைப்பக்குவமே (சமையல்) மூலதனம்! ஆனால் அவர்களின் சந்ததிகள் பலர் இன்று, பட்டதாரிகளாக மிளிர்வதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.
சமூக உணர்வோடு ஒன்று சேர்ந்து சமுதாய நலனுக்கு நற்சேவையாற்ற உறுதியோடும் உற்சாகத்தோடும் எழுத்தாளர் திரு.ஷாநவாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் வருகிறார்கள்.
பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல், கட்டிக்காத்து வரும் ஒப்பிலானைச் சேர்ந்த இம்மக்கள் இன்று சிங்கப்பூர் குடியரசில் சிங்கப்பூர், ஒப்பிலான் சங்கம் (Oppilan Association Singapore) கண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூரின் பன்முகத் தன்மைக்கும், இந்திய, குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்துக்கும் சங்கம் மேலும் வலுசேர்த்து, மெருகூட்டி சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு சேவையாற்ற வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
எம். இலியாஸ்
ஆசிரியர்
செம்மொழி, சமூக இலக்கிய இதழ்.