17/12/2025
யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கல்லூரியின் முன்னாள் அதிபரும் மேலாளருமான லேடி லீலாவதி இராமநாதன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நாளை (18-12-2025) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், கல்லூரியின் பழைய மாணவனும், அகில இலங்கை இந்து மாமன்றத் துணைத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் கலந்துகொண்டு உருவச்சிலையைத் திறந்து வைத்து நினைவுப் பேருரையையும் நிகழ்த்தவுள்ளார்.
இராமநாதன் கல்லூரி வளாகத்தில் இராமநாதன் தம்பதிகள் வசித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்திற்கு முன்பாக இந்த உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவிகளின் மிகுந்த முயற்சியினாலும், பங்களிப்பினாலும் லேடி இராமநாதன் அவர்களின் அரும்பணிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
1909ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே தங்கியிருந்து, இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி மற்றும் இராமநாதன் சைவப் பெண் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றின் மேலாளராகவும், அதிபராகவும் லேடி இராமநாதன் அரும்பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் சைவ மங்கையர் கழகத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் இருந்து அவர் ஆற்றிய கல்வி மற்றும் சமூகப் பணிகள் என்றும் நினைவு கூறத்தக்கவை.
இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் பதிப்பாசிரியத்துவத்தில் உருவான "கர்மயோகி லேடி இராமநாதன்" எனும் சிறப்பு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.