04/09/2019
2019 ம் ஆண்டு சிவகாமி அறக்கட்டளையினால் ‘வாழ்நாள் சாதனையாளர்’ என்ற உயரிய விருதினைப் பெறும் முன்னால் உதவி அதிபரும் பிரபல இலக்கிய கர்த்தா மற்றும் பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட தெணியான் பற்றி 19-04-2015ல் எனது இணையப் பக்கமான ‘மனவீழ்ச்சி’யில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று மேற்படி நிகழ்வை முன்னிட்டு மீண்டும் நட்புக்களுக்காகவும், அவரைப் பாராட்டும் முகமாகவும் வெளிவருகின்றது.நன்றி
தெணியானின் இன்னொரு பக்கம்!
செகா.சிவபாலசிங்கம்
இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் சிறப்பாக முற்போக்கு படைப்பாளிகளுக்கு மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் தெணியான் என அழைக்கப்படும் நடேசன் என்கின்ற இலக்கியவாதி. நா.கந்தையா, சின்னம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக ஜனவரி 6ந்திகதி 1942ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிகண்டி என்னும் ஊரில் ‘தெணி’ என்று அழைக்கப்பட்ட குறிச்சியில் பிறந்தார். அதனால் எழுத்துலகில் தான் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் “தெணியான்” என்கின்ற புனைப் பெயருடன் எழுத்துலகில் தடம் பதித்தார். 2 சகோதரர்களும், 3 சகோதரிகளும் கொண்ட பாசமான குடும்பம். அவரின் சகோதரன் க.நவம் இலங்கை, தமிழ்நாடு, சிறப்பாக கனடிய மக்களால் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.
ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் மற்றும் நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள தாமரை போன்ற தரமான சஞ்சிகைகளிலும் எழுதி புகழ் பெற்றார். இலங்கையின் மூத்த இலக்கியவாதியான டொமினிக் ஜீவாவின் சஞ்சிகையான மல்லிகையின் வளர்ப்புப் பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு அவரின் பல்வேறுபட்ட ஆக்கங்கள் இச் சஞ்சிகையில் இடம் பெற்றன. தமிழ்இலக்கிய உலகில் சாதனைகள் புரிந்து, ஓர் ஜாம்பவானாக வலம் வருவது யாவரும் அறிந்த விடயம். கலாபூசணம், சாகித்திய மண்டல விருது, கொடகே விருது, ஆளுஞர் விருது, கு.சின்னப்பாரதி அறக்கொடை விருது போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரான தெணியான் அண்மையில் இலங்கையின் உயர் விருதுகளில் ஒன்றான ‘சாகித்திய ரத்னா’ என்ற விருதினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. தெணியான் அவர்களைப் பற்றி அவரின் இலக்கியம், எழுத்துலகம் தவிர்ந்த எனக்குத் தெரிந்த விடயங்களை எந்தவித மிகைப் படுத்தலும் இன்றி உள்ளதை உள்ளபடி முடிந்தவரை கூறுவதே எனது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்
தேவரையாளி சைவவித்தியாசாலையில் (தேவரையாளி இந்துக் கல்லூரி) தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற தெணியான் 10ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்றார். அப்போது தலைமை ஆசிரியராக கவிஞர் மு. செல்லையா அவர்கள் இருந்தார். தெணியானிடம் இருந்த புத்திக் கூர்மையும், அங்கு போதித்த ஆசிரியர்களின் திறமையும் அவரை பாடசாலையில் தனித்துவம் மிக்க மாணவனாக காட்டி நின்றது. பேச்சு, நடிப்பு, எழுத்து ஆகியவற்றில் பரிசுகளும், பாராட்டுக்களும் பெற்றதுடன் கல்வியிலும் சிறந்து விளங்கினார். வடமராட்சி, மற்றும் யாழ்ப்பாணப் பாடசாலைக்களிற்கான பேச்சுப் போட்டிகளில் பலதடவைகள் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதனாலேயோ என்னவோ அவரிடம் வித்துவான்களுக்குரிய ஓர் கர்வம், கம்பீரம் ஆரம்ப காலங்களில் குடி கொணடிருந்தன. இதன் காரணமாகவும், மரியாதை காரணமாகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
தேவரையாளி இந்துக் கல்லூரியில்; மாணவர் தேர்ச்சி மன்றத்தில் விவாத மன்றம் நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் பாடசாலை முடிந்ததும் உயர்தரவகுப்பு மாணவர்களின் விவாத மன்றம் காலஞ் சென்ற ஆசிரியர் ஆ.ம.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 4வது வகுப்பு மாணவனான நான் மேலதிக விளையாட்டுப் பயிற்சிக்காக ஆசிரியர் வரும் வரை, கூட்டம் நடைபெற்ற வகுப்பின் ஓரமாக நின்று அதனை வேடிக்கை பார்ததுக்; கொண்டிருந்தேன்.. இரு அணித்தலைவர்களும் இறுதியாக தொகுத்துப் பேச வேண்டிய நேரம் வந்தது. இருவருமே பேச்சுத் திறன் மிக்கவர்கள். ஒருவர் தெணியான். மற்றவர் பேச்சு, நாடகம் என்பவற்றில் தெணியானுக்கு சவாலாக விளங்கியவர். அவர் தனது முடிவுரையில் தெணியான் பேச்சில் எந்தச் சாரமும் இல்லை அவர் விசர் கதை கதைத்தார் ஆதலால் அவரை அங்கோடைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார். (இலங்கையில் அங்கோடை என்னும் இடத்தில் தான் மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவ விடுதி இருக்கின்றது. (அதாவது தமிழ்நாட்டில் கீழ்ப்பாக்கம் போன்று) அவரைத் தொடர்ந்து வந்து உரையாற்றிய தெணியான் தனது பேச்சை முடிக்கும் போது மிகவும் சாதுரியமாக “எனக்கு முன்னர் பேசிய நண்பர் என்னை அங்கோடைக்கு அனுப்ப வேண்டுமென்றார், நன்றி. ஆனால் நான் அவரை அங்கோடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க விரும்புகின்றேன் ஏனெனில் அங்குதான் பைத்தியங்களுக்கு வைத்தியம் செய்ய முடியும்” என்று கூறியதும் பலத்த கரகோசம் எழுந்தது. பட்டிமன்றங்கள் நடைபெறும் போதெல்லாம் மேற் கூறிய நிகழ்வு வந்து போகும்.
தேவரையாளி சைவ வித்தியாசாலை, தேவரையாளி இந்துக் கல்லூரியாக மாற்றப்பட்ட காலத்தில் அதிபராக சீனித்தம்பி அவர்கள் நியமிக்கப்பட்டார்;. அப்போது உயர்தர மாணவர்களுக்காக ஜுலியசீசர் என்கின்ற ஆங்கில நாடகத்தை தமிழில் தயாரித்து அளித்தார். அந்த நாடகத்தில் மார்க் அன்ரனி பாத்திரம் தெணியானுக்கு வழங்கப்பட்டது. தனக்குக் கொடுத்த பாத்திரத்தை உணர்ச்சி பூர்வமாக நடித்து அமோக பாராட்டைப் பெற்றார். கொழும்பில் 1952ம் ஆண்டு முதல் இரவு என்ற நாடகத்தில் இந்தியக் கலைஞர்களுடன் வில்லனாக முக்கிய பாத்திரத்தில் நடித்தவரும், வைரமுத்து, அண்ணாச்சாமி ஆசிரியர் ஆகியோருடன் முக்கிய பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற வதிரியைச் சேர்ந்த நா.திரவியம் அவர்களுடன் இணைந்து அனார்க்கலி என்ற நாடகத்தில் மான்சிங் பாத்திரத்தில் நடித்து சிறந்த வில்லன் நடிகன் என்பதையும் நிலை நாட்டினார். இந்த நாடகத்தில் பெண்பாத்திரத்தில் அனார்க்கலியாக நடித்தவர் அல்வாயைச் சேர்ந்த செல்லத்தம்பி ஆவார். எனது பாடசாலை வராற்றில் இரண்டுமே மறக்க முடியாத நாடகங்கள் எனலாம்.
படிப்புத் திறன், பேச்சுத்திறன், நடிப்புத்திறன் என்பவற்றைத் தன்னகத்தே கொண்ட நடேசன் பாடசாலையில் நன்கு அறியப்பட்டவராகவும் சொல்லப் போனால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக விளங்கியதில் வியப்பேதும் இல்லை. அதுமட்டுமன்றி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்ற மாணவனாகவும், கல்வியிலும் திறமைசாலியாக விளங்கிய அவர், சிரேஸ்ட தராதரப் பரீட்சியில் முதற் பிரிவில் சித்தியடைந்தார்.
தொடர்ந்து தனது உயர்கல்விக்காக கரவெட்டி, விக்கினேஸ்வராக் கல்லூரியை நாடினார். பல்கலைக்கழகம் போகக் கூடிய திறமை இருந்தும் குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் படிப்பினைத் தொடர முடியவில்லை. ஆதலால் தான் கல்விகற்ற பாடசாலையான தேவரையாளி இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் பயிற்சிக்குத் தெரிவாகி பயிற்சியை முடித்ததும் பதுளையில் உள்ள அட்டாம்பிட்டியா மகாவித்தியாலயத்திற்கு அனுப்பப் பட்டார். அங்குள்ள மலையக மாணவர்களுக்கு 6 வருடங்கள் சிறந்த சேவை செய்ததுடன் பதுளையில் உள்ள தமிழ் பாடசாலைகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் இலக்கியச் சொற்n;பாழிவாற்றினார். அங்கிருந்து சொந்த ஊருக்கு மாற்றம் பெற்று இறுதியாக தான் கல்விகற்ற கல்லூரியியே உப அதிபராகப் பணியாற்றி இளைப்பாறியுள்ளார்.
தெணியான் தனது வாழ்க்கைத்துணையாக உறவினரான க.மரகதம் அவர்களை மணந்து கொண்டு 2 பெண்பிள்ளைகளுடனும், 2 ஆண்பிள்ளைகளு;டனும், 12 பேரப் பிள்ளைகளுடனும் தனது சொந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
இவர் பாடசாலைக் காலங்களில் முற்போக்குச் சிந்தனை உள்ளவராக இருந்த படியாலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த படியாலும் தனது சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றில் மாற்றங்களுக்கான கோசங்களை எழுப்பத் தயங்கவில்லை. மெய்மைகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டிய படியால் பலவித இடையூறுகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அத்துடன் எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
கல்லூரியை விட்டுச் சென்று ஆசிரியராகக் கடமைபுரிந்த நேரத்தில் தன்னை இலங்கை பொதுவுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அத்துடன் இலங்கை முறபோக்காளர் சங்கத்திலும் முக்கிய பங்கு வகித்தார். சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் அங்கம் வகித்ததுடன், சாதி ஒழிப்பு, தேநீர்கடை, ஆலயப்பிரவேசம் என்பவற்றிற்காகவும் போராடினார். சிறப்பாக பொலிகண்டி கந்தசாமி;, வதிரி உல்லியனொல்லை அம்மன்;, மாலிசந்தி பிள்ளையார்; ஆகிய ஆலயங்களின் பிரவேசங்களில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு உறுதுணையாக வதிரியைச் சேர்ந்த சி.க.இராஜேந்திரன், அல்வாயைச் சேர்ந்த சதானந்தன் ஆசிரியர் ஆகியோர் பொதுவுடமைக் கட்சியிலும், சாதி ஒழிப்புப் போராட்டத்திலும் அவருடன் இணைந்து செயலாற்றினர்.
பேச்சாற்றல், வாதிடும் திறமை காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பட்டிமன்றங்களில் எல்லாம் அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. அவரின் பேச்சில் நளினம் என்பவற்றுடன் நகைச்சுவை உணர்வும் கலந்திருக்கும். இலக்கியக் கூட்டங்களில் எல்லாம் கடைசிப் பேச்சாளராகப் போடும் அளவிற்கு அவரின் மொழியாற்றனும், நாவன்மையும் சிறப்பாக அமைந்தது.
தெணியானிடம் எனக்கு மிகவும் பிடித்தவை தவறுகள் எனத் தெரிந்தால் நண்பர்களாக இருந்தாலும் சுட்டிக்காட்டுவது. அது போன்று மாற்றான் வீட்டு மல்லிகையாக இருந்தாலும் அதற்கு மணம் உண்டு என்பதனை ஏற்பது. எடுத்துக் காட்டாக ஒருகாலத்தில் தான் நேசித்த, முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் பொதுவுடமை அணியில் இருந்து தடம் மாறிப் போய் வேறு தளத்தில் எழுத ஆரம்பித்த போது அவரை மல்லிகை இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதே போன்று மிக நெருக்கமாகவும், உருக்கமாகவும் பழகிய கா.சிவத்தம்பியையும் விமர்சித்துள்ளார். அதே நேரத்தில் பொதுவுடமைக் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஒன்றாக இருந்து இரு துருவங்களாகப் பிரிந்த எழுத்தாளர் கே.டானியலுடன் அவரின் இறுதிக் காலத்தில் அவரின் வெளியீடுகளுக்குத் துணை புரிந்ததுடன், நட்பும் பாராட்டினார்.
தெணியானின் இலக்கியப் படைப்புக்கள் பெறுமதி வாய்ந்தன என்பதனை சாமானியர்கள் தொடக்கம். பேராசிரியர்கள் வரை அறிந்துள்ளார்கள். அதற்கு சான்றாக அவரைப் பற்றியும், அவருடைய படைப்புக்கள் பற்றியும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களால், ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டிருப்பதுடன் அவற்றில் சில நூல்களாகவும் வெளிவந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை “பொற் சிறையில் வாடும் புனிதர்கள்” என்ற நாவலின் தலைப்பிற்கே அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தியாவில் ஆதிக்க சாதியினராக விளங்கும் பிராமணர் என்ற ஜாதியினரைப் பற்றி துணிந்து சமூக, விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களின் துன்பியல்களை கோடிட்டுக்காட்டி கணித ரீதியாக நிறுவுகின்றார். இதனை மிகச்சிறந்த கண்டு பிடிப்பு என்று சொல்வதா! அல்லது ஆராய்ச்சி என்று சொல்வதா! சிறந்த நாவல் எனறு சொல்வதா! அந்தளவிற்கு மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்தது என்பது எனது கருத்தாகும். உண்மையில் அவரின் பல படைப்புக்களை நான் படிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசாரியார் என அழைக்கப்பட்ட சமூகப் போராளியான சூரன் அவர்களால் தாபிக்கப்பட்டு, வேலுச்சோதிடர், முகாமையாளர் க.மூ.சின்னத்தம்பி, (தலைமையாசிரியர்) கவிஞர் மு.செல்லையா, அதிபர் க.மூ.சீனித்தம்பி போன்ற பெருமக்களின் கடும் உழைப்பினால் பெருவிருட்சமாக தலை நிமிர்ந்து நிற்கும் (தேவரையாளி சைவவித்தியாசாலை) தேவரையாளி இந்துக்கல்லூரி பல் வேறு இடர்ப் பாடுகளுக்கு மத்தியிலும், பல கல்விமான்களையும், அறிஞர்களையும், நாடகக் கலைஞர்களையும், சங்கீத வித்துவான்களையும், விளையாட்டு வீரர்களையும், இலக்கிய கர்த்தாக்களையும், வர்த்தகர்களையும் பாராளமன்ற உறுப்பினரையும் மற்றும் பல்வேறுபட்ட தொழில் நுட்பவியலாளர்களையும், மற்றும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கியது என்பது நிதர்சனமான உண்மை. இந்தக் கல்லூரியின் வரலாறும், அங்கு கற்பித்த ஆசிரியர்களைப்பற்றியும் தெரிந்த, அறிந்த, எழுதக் கூடிய ஒருவர் இன்று உண்டு என்றால் அவர் தெணியான் ஆகத்தான் இருக்க முடியும். அவரை “தேவரையாளி இந்துக் கல்லூரியின் ‘கலைக்களஞ்சியம்’ (Encyclopedia) என்றால் மிகையாகாது. நான் அறிந்த வரை, பல மறைந்த முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் நினைவு மலர்களும், ‘தேவரையாளி இந்து’ என்ற கல்லூரியின் சஞ்சிகைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
2013ம் ஆண்டில் நான் தாயகம் சென்ற போது அவரை எனது மைத்துனர் சாந்தநாதன் ஆசிரியருடன் வீட்டில் சென்று பார்த்தேன். மிகவும் அன்பாகவும், பண்பாகவும் பேசியதுடன், இலக்கியம் சம்பந்தமான பல விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். எனக்கேற்பட்ட சில சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், மனந்திறந்து பல விடயங்களைப் பேசினார். பல்வேறு விருதுகள், பாராட்டுக்களினால் வருகின்ற கர்வம், போதை, ஆகியன தெணியானிடம், இல்லாமல் இருந்தது வியப்பாக இருந்தது. நான் கனடாவிற்கு புறப்படுவதற்கு 2 நாட்களிற்கு முன்னர் நவம் அவர்கட்கு புத்தகப் பார்சல் ஒன்று தந்து விடுவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தது வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் வெளியீடு செய்யப்பட்டு இலங்கையிலும், புலம் பெயரந்த நாடுகளிலும் பெருமளவு சந்தாக்காறர்களைக்; கொண்டதும் இலக்கியத் தரம் வாய்ந்ததமான ‘ஜீவநதி’ என்ற சஞ்சிகையின் ஆலோகசராகவும் தெணியான் அவர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பரந்துபட்ட வாசகர்களாலும், தமிழிலக்கிய ஆர்வலர்களாலும் அங்;கீகரிக்கப்பட்டு, பல விருதுகளுக்குச் சொந்தக்காறராக விளங்கும் தெணியான் அவர்கள் இதுவரை, சுமார் 150 சிறுகதைகள். 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறு நாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100க்கு மேற்பட்ட கட்டுரைகள். விமர்சனங்கள், செவ்விகள் என்பனவற்றை படைப்புலக அறுவடைகளாத் தந்துள்ளார் .