13/04/2019
بسم الله الرحمن الرحيم
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
்கி வரவிருக்கும் ரமலான் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
'இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்' (அல்பகரா 2:183).
ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். 'பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
ரமழான் மாதத்தின் சிறப்பு: 'ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்' (அல்பகரா 2: 185).
'ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்' (புஹாரி)... இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு: 'ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
மூன்றாவது சிறப்பு: 'ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
நான்காவது சிறப்பு: 'ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
1- நோன்பு பரிந்து பேசும்: 'நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், 'நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக'! அல் குர்ஆன் கூறும் 'நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2- நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: 'நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை' என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
3- கனக்கின்றி கூலி வழங்கப்படும்: 'ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
4- நோன்பின் கூலி சுவர்க்கம்: 'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயல் மூடப்பட்டு விடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
5- நரகத்தை விட்டு பாதுகாப்பு: 'எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
6- 'நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
7- முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: 'எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
8- மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: 'வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
9- நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: 'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
10- கஸ்தூரியை விட சிறந்த வாடை: 'எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).