08/05/2026
*நூற்றாண்டு பிறந்தநாள் காணும் அட்டன்பரோ: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் ஆசானே!*
*சர் டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough)!* இந்தப் பெயரை இது வரை நீங்கள் கேள்விப் படாமல் இருந்தால், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நாளை விட சிறப்பான நாள் வேறொன்று அமையாது. உலகமே இன்று டேவிட் அட்டன்பரோ என்னும் அற்புதமான மாமனிதரின் 100வது பிறந்தநாளைக் (08 மே 2026) கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
சரி, அப்படி என்ன அவர் செய்துவிட்டார் என்று கேட்டால்... மனிதகுல வரலாற்றில் நியூட்டன், டார்வின், மேரி கியூரி, ஹம்போல்ட், லின்னேயஸ் உட்பட காலம் கடந்து நிற்கும் மகோன்னதமான ஆளுமைகளின் வரிசையில், சமகாலத்தில் *நம்முடன் வாழும் பொக்கிஷம்* அவர்! நம் போன்ற எண்ணற்ற இயற்கை ஆர்வலர்களுக்கு மானசீக ஆசானும் அவரே! இன்று இயற்கை மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு, காலநிலைப் பேரழிவு குறித்த ஆபத்துகள் முதலாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுகளுக்கும் அதனை ஒட்டிய செயல்பாடுகளுக்கும் அவரது ஆவணப்படங்கள் முதன்மைக் காரணம் ஆகும். *இயற்கை தன் வரலாறு கூற முடிவெடுத்தால்*, சந்தேகத்திற்கு இடமின்றி அது தேர்வு செய்வது டேவிட் *அட்டன்பரோவின் காந்தக் குரலாகவே இருக்கும்*.
இந்த உலகின் மீது வேறு எந்த உயிரினமும் செலுத்தாத ஆதிக்கத்தை மனிதர்கள் ஒருசேர செலுத்தி வருகின்றனர். இது எங்கு சென்று முடியும் என்ற அச்சம் துளியும் இல்லை. *இயற்கையைப் பாதுகாப்பதென்பது* ஏதோ மரங்களையும் பறவைகளையும் காப்பது மட்டுமல்ல; அது *ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தொடர்ச்சியைத் தீர்மானிக்கும் செயல்பாடு* என்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். இதை நாம் தவறவிட்டால், நம் சந்ததிகளுக்கான இறுதி காரியத்தை நாமே செய்துவிட்டோம் என்று முடிவு கட்டிவிடலாம். சிலருக்கு, நான் நிலைமையை மிகைப்படுத்தி சொல்வது போலத் தோன்றும். *வீட்டை விட்டு வெளியே வந்து உங்கள் சுற்றுச்சூழலை அவதானியுங்கள்*. என்னுடைய பதைபதைப்பில் உள்ள நியாயம் புரியும்.
கட்டுப்பாடற்ற கேளிக்கைகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் தலைமுறைகளை நல்வழிப்படுத்தவும், இன்னும் பிறக்காத தலைமுறைகளின் வாழ்வு செழிக்கவும், அனைவரும் சர் *டேவிட் அட்டன்பரோவைப் பற்றி* மேலும் தேடிப் படித்து, அதனை நம் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கும், *குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்*. தூய்மையானக் காற்று, தண்ணீர், நிலம்—இதை மக்களுக்கு உறுதி செய்யாத வளர்ச்சி என்பது அடித்தளமற்ற கட்டுமானம் போன்றது. எப்போது சரிந்து உயிர் பறிக்கும் என்றே தெரியாது. ஒரு செங்கல் தானே, ஒன்றும் ஆகாது என்று நினைத்து ஒவ்வொருவரும் பல செங்கல்களை பற்பல ஆண்டுகளாக உருவிக் கொண்டிருக்கிறோம். அது நம் குழந்தைகள் மீது மொத்தமாக சரியாமல் இருக்க, குறைந்தபட்சம் இன்றிலிருந்தாவது நாமே அதை சீர் செய்ய வேண்டும். இது இயற்கைப் பாதுகாப்பைப் புரிந்து செயல்பட உதவும் சாரம் என்று நம்புகிறேன்.
எனவே, ஆசான் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளான இன்று அனைவரும் உறுதி ஏற்போமாக! மேலும், *உலக அமைதிக்கான நோபல் பரிசு* அட்டன்பரோவின் கைகளுக்கு வந்து, அப்பரிசு பெருமை கொள்ள வேண்டும் என்பதே என் போன்ற எண்ணற்ற இயற்கைக் காதலர்களின் நெடுங்கால கனவு!
நன்றியுடன்,
சு. வே. கணேஷ்வர்.
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
*சேலம் பறவையியல் கழகம்*.