13/06/2026
*அல்லாஹ்வின் திருப்பெயரால்..*
*தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.*
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக, தமிழகத்தில் பல பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
*இதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில் நாளை 14,06,2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4, மணி அளவில் புது பஸ் ஸ்டாண்ட் இருந்து பேரணி புறப்பட்டு அன்பு பேக்கரி அருகில் முடிவடையும்.*
இந்தப் பேரணியில் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள அனைத்து சகோதரர்களும், சகோதரிகளும் பேரணியில் கலந்து கொண்டு நம்முடைய கண்டனத்தையும் கோரிக்கையும் எடுத்துரைப்போம். இன்ஷா அல்லாஹ்!
*அநீதிக்கு எதிராக அர்ப்பணிப்போம்*
இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல், பொதுநல சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் துன்பத்திலும், சிரமத்திலும் தவிக்கும் போது கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது.
குறிப்பாக, சமூகத்தில் எவரேனும் அநீதிக்கு ஆளாகும் போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவும், வரம்பு மீறுபவருக்கு எதிராகக் குரல் எழுப்பவும் துணிவுடன் முன்வர வேண்டும்.
*நபிமார்கள் செய்த பணிகள்*
*துன்பத்தைத் துடைத்த துல்கர்னைன்*
துல்கர்னைன் எனும் நல்லடியாரின் வரலாறு வழியாகவும் அல்லாஹ் நமக்குப் பாடம் கற்பிக்கிறான். அவருக்கு அல்லாஹ் அளப்பரிய ஆற்றலை, பெரும் வலிமையைக் கொடுத்திருந்தான். அவர் பூமியில் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் எளிதாகப் பயணம் சென்றார். அப்போது ஓரிடத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் பாதிக்கப்படும் சமூகத்தைச் சந்தித்தார். அல்லாஹ்வின் அருளால் அந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில் மகத்தான உதவி செய்து கொடுத்தார்.
*பின்னர் (துல்கர்னைன்) ஒரு வழியில் தொடர்ந்து சென்றார். முடிவில் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பை அமைக்கிறேன்’’ என்றார்.*
*(தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது “ஊதுங்கள்!’’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’’ என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.*
(திருக்குர்ஆன் 18:92-98)
நல்லடியார் துல்கர்னைன் அவர்கள் இரு மலைகளுக்கு இடையே மிகப்பெரும் தடுப்பை ஏற்படுத்தி *மக்களைக் காப்பாற்றினார். இவ்வாறு நாமும் முடிந்தளவு துன்புறும் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.*
*அல்லாஹ்வின் தூதரின் அழகிய கட்டளை*
நாம் பிறரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுமாறு நபிகளாரும் நமக்குக் கட்டளை இட்டுள்ளார்கள். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மல் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
*அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுங்கள்!*
நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும்.
*நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள்.*
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2444)
அதுபோல் அக்கிரமம் அநியாயம் எங்கு நடைபெறுகிறதோ அதை முஸ்லிம்கள் தடுக்க வேண்டும் அல்லது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதுதான் இஸ்லாம் காட்டிய வழியாகும்.