06/11/2024
இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் அமரன் திரைப்படம் - எஸ்ஐஓ கண்டனம்
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து பொதுமக்கள் மனங்களில் இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் படமாக உள்ளது. ஜெய் பஜ்ரங்பலி முழக்கத்தை இந்தியாவின் முழக்கமாகவும், விடுதலை முழக்கமான ஆஸாதியை தேச விரோத முழக்கமாகவும் இத்திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மக்கள்மயப்படுத்தும் முயற்சியாகும். குறிப்பாக, மாணவர் சமூகத்தை இது பெரிதும் மாசுபடுத்தும்.
இந்தத் திரைப்படத்தை துணை முதலமைச்சரான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோகம் செய்திருப்பதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் படத்தைப் பாராட்டியிருக்கிறார். இது மக்கள் விரோத பாசிசத்துக்கும், இஸ்லாமிய வெறுப்புக்கும் துணைபோகும் செயலாகும். திராவிட அரசியல் என்று சொல்லிக்கொண்டு தங்களது வணிக நோக்கங்களுக்காக இப்படியான மலிவான செயல்களில் இவர்கள் ஈடுபடுவது தமிழ்நாட்டு நலனுக்கு உகந்ததல்ல.
காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரால் அரங்கேற்றப்படும் மனித உரிமை மீறல்களை மூடிமறைத்துவிட்டு, காஷ்மீர் முஸ்லிம்களை தேச விரோதிகளாக இந்தப் படம் சித்தரிக்கிறது. இப்படியொரு மோசமான படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கும் எஸ்ஐஓ தன் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.