06/02/2026
SPARROW-R THYAGARAJAN LITERARY AWARD 2025
ACCEPTANCE NOTE OF AWARDEE DR SARASWATHI VENUGOPAL WITH PLAQUE
ஏற்புரை
பெண் ஓர் அற்புதம்!
முனைவர் சரஸ்வதி வேணுகோபால்
‘சிட்டுக்குருவி’ – எத்துணை அழகான சின்னஞ் சிறிய பறவை. அதைக் கண்டு வியக்காத மனமில்லை; அவ்வளவு அழகு! அவ்வளவு சுறுசுறுப்பு! அது இலக்கியப் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் SPARROW என்ற நிறுவனமாக இருந்தாலும் அதே பண்புகளுடன் திகழ்கிறது. அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்துக்கு முதலில் என் பாராட்டு.
பெண்களின் உணர்வுகளைப் பேணும் தாயாக, பெண்ணின் சமூக அந்தஸ்தின் உணர்வுக்குப் பாடுபடும் வழக்கறிஞராக, பெண்ணின் அருமையை, பெருமையைப் பறைசாற்றும் ஆவணமாக SPARROW திகழ்கிறது என்றால் அது எள்ளளவும் மிகையில்லை.
உண்மையாக உழைத்துப் பலர் எழுதிய, கூறிய பல செய்திகள் பொதுவாகச் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்துள்ள நிலையில் (எப்பொழுதேனும் யார் காதிலாவது விழும்) எனக்கு நாட்டுப்புறவியல் இலக்கியத்திற்கான விருதை அளித்த இந்த நிறுவனத்தை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். எங்கோ ஒரு மூலையில் மதுரையைச் சுற்றியமைந்த புழுதி படிந்த சிற்றூர்களில் வாழும் ஒட்டிய வயிறும் கட்டிய பீற்றலுமாய் உள்ள பல்வேறு தாய்மாரை, குழந்தைகளுடன் கூடிய மகளிரைக் கண்டு அவர்களின் பாடல்களையும், கதைகளையும் நகைச்சுவைத் துணுக்குகளயைம் சேகரித்து மகிழ்ந்த நான் இதே துறையில் 51 ஆண்டுகளாக ஆய்வுகளை நிகழ்த்துவதற்கு ஓர் அங்கீகாரம் கொடுத்துள்ளது இந்நிறுவனம். இது எனக்கு வழங்கும் இந்த விருதை நான் பெருமையாக, சிறப்பாகக் கருதி ஏற்றுக் கொண்டு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதை எனக்கு வழங்கிய D.I. அரவிந்தன், T. பரமேஸ்வரி, அம்பை ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவினருக்கும், இந்நிறுவனத்தின் ஆணிவேராக நிற்கும் நிறுவன அறங்காவலர்களுக்கும் விருதை நிறுவிய ஆர்.
தியாகராஜன் அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.
என்னுடன் இவ்விருதைப் பெறவிருக்கும் என் அன்பு மாணவர் திருநாகலிங்கத்திற்கும், தொலைவில் வட கிழக்கில் உள்ள மிஸோ, காஸி மொழிகளின் நாட்டுப்புற இலக்கிய அறிஞர்களான மிஸோராம் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மார்கரெட் எல். பச்சுஆவு, ஷில்லாங்கில் உள்ள NEHUவைச் சேர்ந்த டாக்டர் எஸ்தர் சையம் ஆகியோருக்கும் என் அன்பு வாழ்த்துகள்!
1974 ஜனவரியில் என் கள ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். முதலில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. என் ஆசான் டாக்டர் முத்துச் சண்முகம் பிள்ளைதான் என் மேற்பார்வையாளர். அவர் கொடுத்த ஊக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினேன். முதலாண்டில் சில கல்லூரிகளில் ஒப்பாரி பற்றிய கட்டுரைகள் அளித்ததன் விளைவாகத் தியாகராசர் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவவர்கள் என்னை ஒப்பாரி சரஸ்வதி என்று அழைத்தனர்! அது எனக்கு மிகுந்த நகைப்பை ஏற்படுத்தியது. இன்னொரு வயதான பாத்திமாக் கல்லூரி எழுத்தர் என்னைப் பார்த்து ‘‘ஒப்பாரியில் பி.எச்.டி. பண்றியாமே!’ இனிமே சடங்குகளில் ஏதாவது சந்தேகம் வந்தா உன்கிட்ட கேட்டுக்கலாம்’’ என்று கிண்டல் செய்தார். இன்னோர் அம்மையார் ‘‘ஒப்பாரியா? ஐயய்யோ. எங்க வீட்ல பாடமாட்டேன். வேணும்னா ஒங்க வீட்ல வந்து பாடறேன்’’ என்றார்! இவையெல்லாம் பசுமரத்தாணிபோல் பதிந்த செய்திகள் இன்றைக்கும் மகிழ்வூட்டுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் தொடுவதற்குச் சற்று அஞ்சும் தலைப்பை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தேன். கிண்டலும், கேலியும் ஒருபுறம் இருப்பினும், அன்பும் ஆதரவும் மறுபுறம் பெருகியது.
1975 ஏப்ரலில் என் தாயார் இறைவனடி சேர்ந்தார். அப்பொழுது என் தமக்கை என் தாயாருக்குப் பாடிய ஒப்பாரி:
‘‘நாளோடிப் பேச்சே – என்னப் பெத்தா அம்மா ஒன்
நல்ல முகம் காணலியே
போதோடிப் போச்சே – என்னைப் பெத்த அம்மா ஒன்
பொன்னு முகம் காணலியே’’
இதைக்கேட்டு, ஆற்றாமையால் அழுது புரண்டேன். என் தாய்க்குப் பாடிய ஒப்பாரியே என் தொகுப்பிலும் இடம்பெற்று விட்டது.
கல்வியறிவில்லாத பெண்கள் அப்படி என்ன பாடிவிடப் போகிறார்கள் என்று கேட்டவர்களை, எண்ணியவர்களை, வியப்பில் கண் விரியச் செய்தன அவர்களின் ஒப்பாரிப் பாடல்கள்.
முதல் அழகு – மோனை நயம். தன்னை அறியாமல் ‘குபுகுபு’ என்று பெருக்கெடுக்கும் நீரோட்டம் போல அப்பாடல்கள் மெய்சிலிர்க்கச் செய்யும்.
‘‘சந்தனக் கட்டை வெட்டி – நான் வளத்த மகளே
சமுத்திரம் போல் தீவளத்து
சமுத்திரம் போல் தீயிலே – ஒன்னை
தள்ளிவிடச் சம்மதிச்சேன்.
குங்குமக் கட்டை வெட்டி – நான் வளத்த செல்வமே
கோபுரம்போல் தீவளத்து
கோபுரம் போல் தீயிலே – ஒன்னைக்
கொட்டிவிடச் சம்மதிச்சேன்’’
என்ன ஒரு மோனைநயம்! இதைக்கேட்டு மயங்காதார் உண்டோ? இவ்வாறு நூறு பாடல்கள் தரமுடியும்.
ஒப்பாரி பெண்கள் கலை. அவர்களின் மனதில் தோன்றும் உவமைகள், உருவகங்கள் எல்லாம் அவர்களைச் சுற்றியே தான் அமையும். ஏனெனில் அவர்கள் வேறெங்கும் போவதில்லை. இவற்றை ஊர்ப் படிமங்கள் (Native images) என்பர்.
”கத்திரிக்காய் பச்சநிறம் கர்ணன் கைப் பூமாலை
காத்தடிச்சு மங்காம – நான்
கவலப்பட்டு மங்கறேனே
வெள்ளிரிக்கா பச்ச நிறம் வீமன்கைப் பூமாலை
வெயிலடிச்சு மங்காம – நான்
வெசனப்பட்டு மங்கறேனே”
இன்றிருக்கும் எழுத்திலக்கியக் கவிஞர்கள் கூட இந்த அளவுக்கு உருவக அணியைப் பயன்படுத்த முடியுமா என்று தோன்றுகிறது.
இது ஓர் இளம் விதவையின் ஒப்பாரி.
பல அழகிய உருவங்களைக் கொண்டு விளங்கும் இப்பாடல் கல் நெஞ்சையும் கரைக்கவல்லது. அவள் தன்னைப் பசுமையான புத்தம் புதிய கத்திரிக்காயாக, வெள்ளரிக்காயாகக் கூறிக் கொள்கிறாள். மகாபாரதத்தின் மாபெரும் வீரர்களான கர்ணன், வீமன் ஆகியோரின் கைகளில் தவழும் மாலையாக எண்ணுகிறாள்.
காய்களின் பச்சைப் பசேலென்ற நிறமும், அவற்றின் புத்தம் புதிய பளபளப்பும் அந்த இளம்பெண்ணின் இளமையை உணர்த்தும். பூமாலை அவளது அழகையும், கர்ணன், வீமன் ஆகியோர் அவள் கணவனையும் குறிக்கும். காற்றின் வலிமையும், கதிரோனின் வெம்மையும் மூப்படைதலையும், நோயுறுதலையும் உணர்த்தும்.
இத்தகைய திறமையும் கவிதை படைக்கும் ஆற்றலும் ஒரு கல்வியறிவில்லாத இளம்பெண்ணின் ஆழ்மனத்தில் இருப்பதை யாரேனும் கனவிலாவது காணமுடியுமா?
பெண்ணின் அடங்கிப் போதலும், ஆணுக்கு அஞ்சுதலும், என்ன செய்வேன் என்று ஏங்குதலும், குழந்தைகளை வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து காப்பாற்றத் துடித்தலும் இயற்கையாக அமைந்து கிடக்கின்றன. ஆனால் தாங்கொணாத் துயரம் வரும்பொழுது கணவனை எதிர்த்துப் பேசுதலும், அழகான உருவங்கள் கொண்டு அனைவரும் அறியும் வகையில் அவனைச் சாடுதலும் சில ஒப்பாரிகளில் காணுங்கால் உடல் புல்லரிக்கிறது.
சான்று:
‘‘மாட்டு வண்டி கட்டி – என்னப் பெத்த ஆத்தா
மாயவரம் போயெறங்கி
மாயவரம் சந்தையில – என்னெ
மலிஞ்சு வெல கூறினீங்க
கூட்டு வண்டி கட்டி – என்னப் பெத்த ஆத்தா
கும்பகோணம் சந்தையில – என்னெ
கொறச்சுவெல கூறினீங்க’’
தாயின் உடல் மீது விழுந்து அழுது, கூடியிருக்கும் கூட்டம் அறியும் வகையில் ‘‘இவனுக்குப் போய் என்னைச் சந்தையில் ஆடு மாடு விற்பதுபோல் மலிவாக விற்று விட்டீர்கள்’’ என்று தன் துன்பமான வாழ்க்கையைக் கூறுவது அவளுடைய துணிச்சலைக் காட்டும்.
‘‘இந்தாடா பையா ஒந் தாலி’’ என்று கணவன் கட்டிய தாலியை அறுத்து வீசும் பெண்களையும் காண்கிறோம்.
மேலே கண்ட செய்திகள் எல்லாம் ஆயிரத்தில் ஒரு பங்கு என்று கூறினால் கூடச் சரியில்லை. இலட்சக்கணக்கான பாடல்கள், கதைகள், பழமொழிகள், கதைப்பாடல்கள், விடுகதைகள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் பெண்கள் படைத்தவை என்று மிகப் பல உண்டு. ஆயின் வாய்மொழி இலக்கியத்திற்கு ஆசிரியர் இல்லை என்பதால் அவற்றைப் பிரித்தறிய முடியாது. ஆனால் உய்த்து உணரலாம்.
எத்துணைக் கதைகள் அவர்கள் நுண்ணறிவைக் காட்டவல்லன! எத்துணைப் பழமொழிகள் அவர்களின் வாழ்வில் அனுபவித்த கொடுமைகளை, துன்பங்களை கூறவல்லன. எல்லாம் கூற இடமும் நேரமும் இல்லை. அவற்றை அறிய வேண்டுமாயின் நாட்டுப்புற இலக்கியக் கடலுக்குள் மூழ்கி நீராடி முத்துக் குளிக்க வேண்டும்.
இவ்வுரையில் பெண்ணின் சிறப்புகளை ஓரளவேனும் காட்டியிருந்தால் நான் வெற்றி பெற்றவளாவேன். அவளை ஓர் ‘அற்புதம்’ என்று கூறினால் மிகையாகாது.
Acceptance Note
Woman, a Marvel!
Dr Saraswathi Venugpal
‘Sparrow’ – How beautiful are you, my little bird? There can’t be anyone who doesn’t lose heart seeing you. You are that pretty! That active! Your name goes well with ‘SPARROW’, which encourages Indian literary writers with its love and support. Congratulations to the founders for having selected that name.
SPARROW is the mother who protects the feelings and emotions of women, an advocate who brangles for the excellence of the social status of women, a documentation centre that declares women’s greatness and eminence.
Many people have done sincere research which have remained like a conch being blown into a deaf man’s ears and remained unknown. In such a situation, for honouring me with an award for folklore literature, I offer my regards and best wishes to SPARROW. I travelled through the dusty streets and muddy roads in the outskirts of Madurai to see the women who were in a pathetic state, in order to collect their precious songs, tales and proverbs. I took pleasure in this work and this organisation has given me recognition for continuing to do research in this field for the past 51 years. I consider this a matter of pride and an honour and offer my heartfelt thanks to the organisation. I would like to thank the SPARROW panel of judges D I Aravindan, T Prameswari, and Ambai. My thanks are also due to R Thyagarjan for instituting the award.
My best wishes and congratulations to the other award-winning Tamil folklorist and my dear student Dr A Thirunagalingam and the non-Tamil folklorists of faraway north eastern languages of Mizo and Khasi, Prof. Dr Margaret L Pachuau and Dr Esther Syiem, NEHU, Shillong.
In January 1974 I began to do fieldwork; in the beginning I felt as though I was left in a forest blindfolded. With the encouragement given by my supervisor Prof. Shanmugam Pillai, I became a successful fieldworker. Since I presented a few papers on dirges in other colleges, the students of Thiagarajar College began to tease me calling me “Lamenting Saraswathi”! I thought that was quite humorous. An old clerk in Fatima College pulled my leg saying, “I heard you are doing a PhD on dirges! In future if anyone has doubts regarding death rituals, they can consult you!” One lady whom I approached for dirges exclaimed, “Sing dirges in my house? I can’t do that. If you want, I can come and sing in your house!” All these are deeply etched on my mind and even now I enjoy thinking about them. 50 years ago, I took up a subject most people were hesitant to take up and did my research. There was teasing and mocking but on the other hand there was also much love and support.
In April 1975, my mother passed away. At that time, my elder sister sang a dirge for her.
‘‘nalodip pochae – ennaip petta amma un
nalla mugam kaanaliyae
pododip pochae – ennaip petta amma uṉ
ponnu mugam kaanaliyae’’
Time has flown away, O mother, who bore me
Your loving face is not seen anywhere
Time has flown away, O my mother, who bore me
Your face with golden glow is not seen anywhere
On hearing this, I fell down and cried. This dirge for my own mother found a place in my collection.
People may think, ‘These illiterate women sing. What do they know about poetry?’ But once they listen to some songs, they will be wonderstruck.
The first thing are the alliterations. They flow like a cascading waterfall and can be exhilarating.
‘‘santanak kattai vetti – naan vaLatta makaLae
samuthiram poal tiivaLattu
samuthiram poal tiiyilae – onnai
tallivida sammatichaen
kungumak kattai vetti – naan vaLatta selvamae
kopuram poal tiivaLattu
kopuram poal tiiyilae – onnaaik
kottivida sammadichaen”
(I cut the sandalwood – O daughter whom I raised
And raised the fire like an ocean
And in that ocean-like fire,
I agreed to push you
I cut the vermilion wood – O my treasure whom I raised
And raised the fire high as a tower
And in that tower-high fire,
I agreed to dispose you)
What terrific alliterations! How can one not admire such songs? One can cite hundreds of such songs.
Dirge singing is an art of women. The similes and metaphors are from around them because they don’t travel away from where they live. These are referred to as native images.
kattirikkaa pachai niRam karnan kaip poomaalai
kaattadichu mangaama – naan
kavalappattu mankaRaenae
vellirikkaa paccha niram veemankaip poomaalai
veyiladichu mangaama – naan
vesanappattu mangaRaenae
(Aubergine is green – the garland in the hands of Karna
Not fading in the wind – I am
Fading in depression
Cucumber is green – the garland in the hands of Bhima
Not fading in the sun – I am
Fading in sorrow)
Even proficient literary poets cannot imagine such beautiful metaphors I feel.
This is a dirge sung by a young widow. This is a beautiful song having many metaphors. The young widow calls herself a green and fresh brinjal and cucumber and a beautiful garland that is in the hands of Karna and Bhima. The green colour and freshness of the vegetables imply the youthfulness of the woman. The flower garland implies her beauty and the great Mahabharat heroes namely Karna and Bhima imply her husband. The power of wind and the hot sun imply aging and ailments.
No one can imagine that such expertise and talent to create poetry can lie deep in the mind of an illiterate woman.
A woman’s submissiveness, fear of the man in her life, worrying about what she can do, her anxiety about saving her children from the travails of life come to her naturally. But when we see in some dirges, her defying her husband and insulting him in public with choicest words and imagery when she faces unbearable sorrow, one can’t but feel goosebumps on one’s own body.
Here is an example:
“maattu vandi kattii – ennaap petta aathaa
maayavaramm poayiRangi
maayavaram santhaiyilae – eṉṉa
malinchu vela kooRineenga
koottu vandi katti – ennap petta aathaa
kumbakonam poayiRangi
kumbakonam santhaiyilae – eṉṉa
koRachu vela kooRineenga’’
(Getting a bullock cart ready – O mother, who bore me
You went to Mayavaram
And in the Mayavaram fair – I was
Sold at a cheap price
Getting a covered cart ready – O mother, who bore me
You went to Kumbakonam
And in the Kumbakonam fair – For me
You quoted a low price)
Falling on her mother’s body and crying she says in front of all the kith and kin that her mother sold her like cattle, at a very cheap price, to her husband. This shows her courage to tell those gathered how miserable her life is.
We also see women who cut the ‘taali’, the marital chain, from their necks and throw it at the husband saying, “Here man, take your ‘taali’” in folk songs.
What has been given above is just a drop in the ocean. The villages are full of lakhs and lakhs of songs, tales, proverbs, ballads and riddles. Many of them are authored by women. But oral literature does not have authors and therefore one cannot separate those authored by women. But we can prove by analysis.
There are so many that reflect their sensitivity! And so many that picture the cruelties, sufferings that they experienced in their lives. There is not enough space and time to talk about all of them. If one wants to learn what is told in folklore literature one has to get into its ocean and do some pearl diving.
Even if I have shown in this note the special attributes of these songs to some extent, I would consider myself successful. It won’t be an exaggeration to call this woman of the rural areas, a ‘marvel’.
-DR SARASWATHI VENUGOPAL