04/08/2026
#கிரகோரியார்பூசை #
நம்முடைய கத்தோலிக்கத் திரு அவையிலுள்ள பல அழகிய பாரம்பரியங்கள், பல கத்தோலிக்கர்களுக்குத் தெரியாமல் இருப்பது மனவருத்தம் அளிக்கிறது.
இதனால் அவை அருகி வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பது எமது கடமை. அத்தகைய ஒரு மிகப் பழைமையான பாரம்பரியத்தைப் பற்றியே இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.
இறந்துபோன ஒருவருக்காக 30 நாட்கள் தொடர்ந்து திவ்விய பலி பூசை (திருப்பலி) ஒப்புக்கொடுத்தல், கிரகோரியார் பூசை என அழைக்கப்படுகிறது.
கிரகோரியார் பூசைகளின் முடிவில், அந்த ஆன்மா நித்திய சம்பாவனையை அடையும் என நம்பப்படுகிறது.
அதாவது, அந்த ஆன்மா இன்னும் உத்தரிக்கும் ஸ்தலத்தில் அவதியுற்று இருந்தால், கிரகோரியார் பூசைகளின் முடிவில் அங்கிருந்து விடுதலை பெற்று மோட்சத்தை அடையும்.
30 நாட்களும் ஒரே குரு பூசைப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன் இந்தப் பூசைகள் கிரகோரியார் பூசை என அழைக்கப்படுகின்றன?
புனித பெரிய கிரகோரியார் பாப்பரசர் ஆவதற்கு முன்னர், ஆசிர்வாதப்பர் சபையின் பிரதம மடாதிபதியாக இருந்தார்.
அச்சபையில் யுஸ்துஸ் எனும் ஒரு துறவி நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருந்தபோது, சபை ஒழுங்குகளுக்கு மாறாகத் தான் மூன்று தங்கக் காசுகளை மறைத்து வைத்திருப்பதாகத் தனது சகோதரனிடம் ஒப்புக்கொண்டார்.
இந்தச் செய்தி மற்ற துறவிகளின் காதுகளுக்கும் எட்டியது. அவர்கள் தீவிரமாகத் தேடியபோது, யுஸ்துஸின் மருந்துப் பொருட்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த மூன்று தங்கக் காசுகளையும் கண்டுபிடித்தனர்.
ஆசிர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு மிகக் கடினமான விதிகள் இருந்தன.
இதைக் கேட்ட மடாதிபதி கிரகோரியார், எந்தத் துறவியும் யுஸ்துஸைச் சந்திக்கக் கூடாது என்றும், அவர் இறந்தபின் ஏனைய துறவிகளுடன் அடக்கம் செய்யப்படக் கூடாது என்றும் கட்டளையிட்டார். இது மற்ற துறவிகளுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தார்.
இதைக் கேட்ட யுஸ்துஸ், தன் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மரணமடைந்தார்.
யுஸ்துஸ் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரை நினைத்து மடாதிபதி கிரகோரியார் கவலைப்பட்டார். அவருடைய ஆன்மா உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் என எண்ணினார். அந்த ஆன்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
மடாதிபதி கிரகோரியார் அத்துறவிக்காக முப்பது தினங்கள் பூசைப்பலி ஒப்புக்கொடுத்து வேண்டுதல் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.
முப்பதாம் நாளில், யுஸ்துஸ் தனது சகோதரனுக்குக் காட்சியளித்து, தனது குற்றம் மன்னிக்கப்பட்டு நித்திய சம்பாவனை பெறப் பரலோகம் செல்வதாகச் சொன்னார்.
புனித கிரகோரியார் தாம் பாப்பரசராகத் தெரியப்பட்ட பின்னர், மரித்தோருக்காகத் தொடர்ந்து முப்பது தினங்கள் பூசைகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கத்தை அனுசரணைக்குக் கொண்டுவந்தார்.
இதனாலே இது கிரகோரியார் பூசை என அழைக்கப்படுகிறது.
இறந்துபோன உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நீங்களும் 30 நாட்கள் கிரகோரியார் பூசைகள் ஒப்புக்கொடுக்கலாம்.
இன்று கிரகோரியார் பூசை ஒப்புக்கொடுக்கும் பழக்கம் மிகவும் அருகி விட்டது. இதற்குக் காரணம், அப்படியொன்று இருக்கிறது என்பதே பல கத்தோலிக்கர்களுக்குத் தெரியாது.
அதுமட்டுமல்லாது, 30 நாட்கள் தொடர்ந்து பூசைப்பலி ஒப்புக்கொடுப்பது சற்றுக் கடினமான காரியம் என்பதனால், அநேகமான மறைமாவட்டக் குருக்கள் இதனைச் செய்வதில்லை.
சில துறவற மடங்களில் இன்னும் கிரகோரியார் பூசைகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.
உத்தரிப்பு ஸ்தலம் ஓர் அக்கினிச் சிறைச்சாலை. அதிலே கிடந்து பதைபதைக்கிறவர்களுக்கு நாம் ஒத்தாசை செய்ய வேண்டும். அவர்கள் மீது இரக்கம் கொண்டு, நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும் அவர்களுடைய வேதனையைத் தணித்து, குறைத்து, விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
கிரகோரியார் பூசைகள் ஒப்புக்கொடுக்க முடியாவிட்டாலும், வருடத்திற்கு ஒருமுறையாவது இறந்த உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக பூசைப்பலி ஒப்புக்கொடுங்கள்.