எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல

  • Home
  • India
  • Chennai
  • எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல

எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல My Vote is NOT for Sale எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல

"வாக்களிக்க பணம்: தமிழ்நாட்டின் அரசியல் புற்றுநோய்"

ஓட்டு விற்பனை என்பது அரசியலை பீடித்த புற்றுநோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் 'அனைத்து ஊழல்களின் தாய்' (Mother of all corruption) என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பணத்தையும், பெரும் ஊழல்களையும், இயற்கைவளக் கொள்ளையையும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் ஊக்குவிக்கின்றன.

ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான நிகழ்வு தேர

்தல்தான். தேர்தலின் மூலம் மக்கள் தம்மை ஆளும் அதிகாரத்தை ஒருசிலருக்கு அளித்து, அந்த ஒருசிலர் மூலம் தமக்கான அரசாங்கத்தை மக்களே நிறுவுகின்றனர். அதாவது, தம்முடைய தலையெழுத்தை தாமே தீர்மானிக்கும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தேர்தல் அமைந்துள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளில் மிக முதன்மையானது வாக்களிக்கும் உரிமை. இதனைக் காசுக்கு விற்கும் மிகக் கொடிய பழக்கம் தமிழ்நாட்டில் வளர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலேயும் கூட, பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது தமிழ்நாடுதான்.

அமெரிக்க ரகசியங்களை வெளிக்கொண்டுவந்த 'விக்கிலீக்ஸ் இணையம்' 2009 ஆம் ஆண்டு தமிழக தேர்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவுக்கு வாக்களிக்கப்பணம் அளிக்கப்படுவதை சென்னை அமெரிக்கத் தூதரகம் உறுதிசெய்துள்ளது.

திருமங்கலம் பார்முலா என்கிற பெயரில் 'மதுரையில் ஒரு ஓட்டிற்கு 5000 ரூபாய் வீதம் அனைத்து வாக்காளர்களுக்கும் பணம் அளிக்கப்பட்டது. காலை நாளிதழுக்குள் பணம் மற்றும் பூத் சிலிப் வைத்து அளித்தார்கள்' என்று அரசியல் கட்சி நிர்வாகிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.
2009 ஆம் ஆண்டில் புதுதில்லியைச் சேர்ந்த 'சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்' எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் மக்களில் 78% பேருக்கு ஓட்டுப்போட பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

2011 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில் 85% தமிழ்நாட்டில் மட்டுமே கைப்பற்றப்பட்டது.

ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள், அதன் பின்னர் ஐந்து ஆண்டுகாலத்தில், தங்களது மிகச் சாதாரணமான அரசு சேவைக்காகக் கூட சுமார் பத்து மடங்கு அதிக பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஐநூறு ரூபாய் ஓட்டுப்போட வாங்குகிறவர், ஐந்தாண்டுகளில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக அளிக்கிறார்.

'அனைத்து ஊழல்களின் தாய்' எனப்படும் இந்தக் கொடிய கேட்டை ஒழித்து, ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமக்களின் கடமையும் ஆகும். "வாக்களித்தல் - ஓர் மனித உரிமை"

தேர்தலில் வாக்களிப்பது ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இதனை 1966 ஆம் ஆண்டின், குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (ICCPR 1996) தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்கபட்டுள்ள இந்த ஐநா ஒப்பந்தம் வாக்களிக்கும் உரிமையைக் கட்டாயமாக்கியுள்ளது.

'நேரடியாகவோ தனது பிரதிநிதிகள் மூலமோ பொது அலுவல் செயல்பாட்டில் பங்கேற்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவுமான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. தேர்தல் சுதந்திரமாகவும், சமவாய்ப்பளிக்கும் வகையிலும். ரகசியமாக வாக்களிக்கும் வகையிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்க வேண்டும் - என்றெல்லாம் இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

'Every citizen shall have the right and the opportunity, without any of the distinctions mentioned in article 2 and without unreasonable restrictions:

(a) To take part in the conduct of public affairs, directly or through freely chosen representatives;
(b) To vote and to be elected at genuine periodic elections which shall be by universal and equal suffrage and shall be held by secret ballot, guaranteeing the free expression of the will of the electors;
(c) To have access, on general terms of equality, to public service in his country.'

- Article 25, International Covenant on Civil and Political Rights – ICCPR 1966

"அரசியலில் பணம் – தேர்தலில் சமவாய்ப்பை குலைக்கக் கூடாது"

நியாயமான, பாகுபாடில்லாத, சமவாய்ப்பளிக்கக் கூடிய தேர்தல் நடைபெற வேண்டும் என்பது பன்னாட்டளவில் ஒப்புக்கொள்ளப்பட ஒரு நெறிமுறை ஆகும். எந்த ஒரு கட்சியும் அளவுக்கு அதிகமாக பணத்தை செலவிடுவதன் மூலம், மற்றவர்களை விட கூடுதலான விளம்பரத்தையோ, வாய்ப்பையோ பெறுவதை தடுக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்ட விதி ஆகும்.

எனவே, அரசியல் கட்சிகளின் செலவுகளுக்கு கட்டுப்பாடு, கட்சிகளுக்கு பணம் வரும் வழி மற்றும் செலவுகள் குறித்த வெளிப்படைத் தன்மை, சட்டவிரோத செலவுகளை தடுத்தல் என பலவிதமான நடவடிக்கைகள் மூலம் தேர்தலில் சமவாய்ப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை ஆகும்.

ஐநா மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள பொதுக் கருத்து ஆவணத்திலும் 'தேர்தல் செலவுகளில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமானது. இல்லாவிட்டால் வாக்காளர்கள் வேட்பாளரை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் சூழல், அதிகமாக செலவிடும் வேட்பாளரால் பாதிக்கப்பட்டுவிடும்' எனக் கூறுகிறது.

'Reasonable limitations on campaign expenditure may be justified where this is necessary to ensure that the free choice of voters is not undermined or the democratic process distorted by the disproportionate expenditure on behalf of any candidate or party.'

- Paragraph 19, UN Human Rights Committee, General comment 25, 1996

இவ்வாறாக, தேர்தலில் கட்சிகள் செலவிடும் பணத்துக்கே நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பன்னாட்டு மனித உரிமை விதிகள் வலியுறுத்தும் நிலையில் - வாக்காளர்களுக்கு பணமோ பொருளோ கொடுத்து வாக்குகளை வாங்குவது அப்பட்டமான மனித உரிமை மீறலும், கொடூரமான குற்றமும் ஆகும். "வாக்களிக்கப் பணம் - ஒரு கொடிய குற்றம்."

ஐநா வளர்ச்சித் திட்டம் வாக்களிக்கப் பணம் அளிப்பதை "ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதாக அளிக்கப்படும் வாக்குறுதிக்கு மாற்றாக வாக்காளர்களுக்கு பணமோ பொருளோ அளிக்கும் சட்டவிரோத செயல்" என்று குறிப்பிடுகிறது.

வாக்களிக்கப் பணம் கொடுப்பது தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையையே முற்றிலுமாகத் தகர்க்கும், சகிக்கவே முடியாத கொடுங்குற்றம் ஆகும். 'ரகசியமாக வாக்களித்தல்' மற்றும் 'அளவுக்கு மீறிய வலியுறுத்தல் ஏதுமின்றி சுதந்திரமாக வாக்களித்தல்' என்கிற தேர்தலின் மிக முக்கிய அடிப்படை கோட்பாடுகளுக்கு இது எதிரானதாகும். (Vote buying breaches fundamental democratic principles for elections such as the secrecy of the vote and the right to make free choice without undue influence.)

இந்திய அரசின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பணம், சாராயம், பிராந்தி, துணி, பரிசுப்பொருள் போன்ற எதையும் வாக்காளர்களுக்கு அளிக்கக் கூடாது. அவ்வாறு அளிப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.

'Acceptance of money to vote for a candidate is a corrupt practice of bribery under Section 123 (1) of the Representation of the People’s Act of 1951. It is also an offence under section 171-B of Indian Penal Code and is punishable with imprisonment of either description for a term which may extend to one year or with fine or both. Acceptance of any offer of liquor or other intoxicants or a dinner to vote for a particular candidate or not to vote for him is bribery.'

- Election Commission of India

"தமிழ்நாட்டின் அரசியல் புற்றுநோயை ஒழிப்பது எப்படி?"

"ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு."

'நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்' என்கிறார் திருவள்ளுவர்.

மக்களின் வாழ்க்கை நாட்டின் ஜனநாய அமைப்பைச் சார்ந்தே இருக்கிறது. ஒரு நல்ல அரசாங்கம் இல்லாமல் போனால், மக்களுக்கு நல்ல வாழ்க்கையும் அமையாது.

அத்தகைய ஒரு நல்ல அரசாங்கத்தை நேர்மையான வழியில் தேர்வுசெய்ய வேண்டிய கடமை அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், ஊடகங்கள், பொறுப்புள்ள குடிமக்கள் என எல்லோருக்கும் இருக்கிறது. "அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?"

தேர்தல் என்பது சட்டத்தை உருவாக்கும் இடத்துக்கான போட்டியாகும். சட்டத்தையே உருவாக்கும் பணிக்கு செல்ல விரும்பும் கட்சிகள், அந்த சட்டத்தை மதிப்பனவாகவும் இருக்க வேண்டும். இது ஒரு மிக அடிப்படையான, மிக இயல்பான, மிக நியாயமான, கட்டாய எதிர்பார்ப்பாகும்.

ஜனநாயகம் என்கிற அமைப்பை நம்பி தான் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால், அந்த ஜனநாயகத்துக்கே வேட்டுவைக்கிறது ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இழிசெயல். உண்ட வீடுக்கே இரண்டகம் செய்வது போல, அரசியல் கட்சிகள் 'குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புகளாக' மாறி ஜனநாயகத்தைக் கெடுத்து நாசமாக்கக் கூடாது.

எனவே, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், அந்தக் கட்சியின் தலைமையும் - 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுக்க மாட்டோம். அனைத்து ஊழல்களின் தாய் எனப்படும் இந்த இழிச்செயலில் தங்கள் கட்சி ஈடுபடாது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இத்தகைய செயல்களில் எந்த ஒரு வேட்பாளரோ, கட்சித் தொண்டரோ ஈடுபட்டால் - அவர்களை உடனுக்குடன் தங்கள் கட்சியில் இருந்து நீக்க அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும். "தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது என்ன?"

இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு ஓரளவுக்கு நீதிமன்றதுக்கு ஒப்பானதாகும். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பயந்தோ, கட்டுப்பட்டோ நடக்க வேண்டிய தேவை இல்லை.

இந்திய சட்டங்களின் கீழ் 'வாக்களிக்கப் பணம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டியக் கடமை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

பணம், இலவசப் பொருட்கள், சாராயம், பிராந்தி, பிரியாணி என எதைக் கொடுத்தாலும், அது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் சொல்கிற நிலையில் - இந்த சட்டவிரோத செயல்களை வெறுமனே வேடிக்கைப் பார்க்கும் 'சோளக்கொல்லை பொம்மை' போன்று தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது.

வெறும் அறிக்கைகள் மட்டுமே இந்தக் குற்றச்செயலை தடுத்துவிடாது. 'குலைக்கிற நாய் கடிக்காது' என்பார்கள். தேர்தல் ஆணையம் கடிக்கிற நாயாகவும் செயல்பட வேண்டும். வாக்களிக்க பணமோ, பொருளோ கொடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் தொகுதிகளின் தேர்தல் முடிவை செல்லாத்தாக அறிவித்து மறுதேர்தல் நடத்த வேண்டும். "ஊடகங்கள் செய்ய வேண்டியது என்ன?"

தேர்தலில் செய்தி ஊடகங்களுக்கு மிக முக்கிய பங்கும் கடமையும் இருக்கிறது. தேர்தல் குறித்தும், போட்டியிடும் கட்சிகளின் கொள்கை மற்றும் மக்களுக்காக முன்வைக்கும் திட்டங்கள் குறித்தும் பக்கசார்பற்ற வகையில் மக்களிடம் கருத்துகளைக் கொண்டுசெல்ல வேண்டியது ஊடகங்களின் முதலாவது கடமை.

அடுத்ததாக, தேர்தல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிப்பதும், முறைகேடுகளைக் கண்டறிந்து வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதும் ஊடகங்களின் கடமை. மூன்றாவதாக, வாக்களிக்கும் சராசரி வாக்காளரின் குரலை வெளிப்படுத்துவதும் பத்திரிகைகளின் பணி ஆகும்.

இவற்றில், தேர்தலைக் கண்காணிப்பதுதான் மிக இன்றியமையாத ஊடகச் செயல்பாடாகும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொடூரச் செயல் ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக இருப்பதால், அதனை அம்பலப்படுத்தி தடுக்க வேண்டியது, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகளின் கடமை ஆகும்.

ஆனால், தமிழ் நாட்டின் ஊடகங்கள் - வாக்களிக்கப் பணம் கொடுக்கும் செயலை ஒரு இயல்பான நிகழ்வு போலவும், அல்லது யார் அதிகம் பணம் கொடுத்தார் என்பதை ஒரு சாதனைப் போன்று கவர்ச்சிகரமானதாகவும் காட்டுகின்றன. இந்த அவலம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

எப்படி ஒரு குண்டு வெடிப்பை அல்லது ஒரு கற்பழிப்பை சாதாரணமாகவோ கவர்ச்சிகரமாகவோ சித்தரிக்க முடியாதோ, அதே போன்று ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலையும் சாதாரணமாகவோ கவர்ச்சிகரமாகவோ சித்தரிக்கக் கூடாது.

இந்த இழிசெயல் எங்கு நடந்தாலும் அதனை பகிரங்கப்படுத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட ஊடகங்கள் வழிவகுக்க வேண்டும். "வாக்களர்கள் செய்ய வேண்டியது என்ன?"

'உழல்களின் தாய்' என்று அழைக்கப்படும் 'ஓட்டுக்கு பணம் கொடுக்கும்' செயலை வாக்காளர்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு அடிப்படை உரிமை. இதனை காசுக்கு விறக மாட்டோம் என ஒவ்வொரு வாக்காளரும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனது உறவினர்கள், நண்பர்களையும் இந்த இழிசெயலைத் தவிர்க்குமாறு வலியுறுத்த வேண்டும்.

இதன் ஒரு அடையாளமாக, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் - எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல (My Vote is Not for Sale) - என்று எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொரு கிராம சபையும் 'எங்கள் ஊரில் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு சொல்வதை எல்லோரும் பெருமையாக கருத வேண்டும்.

இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டம் ஆகும். அன்று 'வெள்ளையனே வெளியேறு' என்று போராடியது போல இன்று 'ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் - கொள்ளையனே வெளியேறு' என்று மக்கள் போராட வேண்டும்.

- தூய்மையான தேர்தலுக்கான குடிமக்கள் கூட்டமைப்பு (Citizens Alliance for Clean Elections)

Address

Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share