நம்மை சுற்றி...
தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிக்னல்... சிவப்பு விளக்கு ஒளிர்ந்த வினாடியில் முகத்தில் வெள்ளை வண்ணம் பூசிய ஒரு இளைஞர் சாலையில் இறங்குகிறார்.
கையில் ஒரு அட்டை... தலைக்கவசம் அணிய மறக்காதீர்கள்... இருக்கைப் பட்டை அணிந்து வாகனம் இயக்க வேண்டும்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்... அதிவேகமாகவோ, ஆபத்தாகவோ வாகனம் ஓட்டாதீர்கள்... என வரிசையாக வாசகங்கள்.
எவ்வித குரலுமின்றி சைகையாலேயே குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் விளைவுகளையும், போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதன் விபரீதத்தையும் மைம் நாடக பாணியில் ஒரு சில நொடிகளில் உணர்த்தி விட்டு, அடுத்த பக்கம் நகர்கிறார் அந்த இளைஞர்.
ஆள், இந்திப்பட ஹீரோ மாதிரி இருக்கிறார். தேர்ந்த கலைஞானம் முகத்தில் தென்படுகிறது. ஹலோ சார்... உங்க பேர் என்ன என்று கேட்டால் புன்னகை மட்டுமே பதிலாக வருகிறது.
ஆமாம். அந்த இளைஞருக்கு காது கேட்காது. பேசவும் வராது. மைம் நாடகக்கலையில் முறையாகப் பயிற்சி பெற்ற அந்த இளைஞரின் பெயர் வீரமணி சேகர். நம் அம்பத்தூர் புதூரில் வசிக்கிறார். தம் கலையை விபத்தில்லா தேசத்தை உருவாக்கப் பயன்படுத்துகிறார்.
புதூர், அண்ணா நகர், முதல் பிரதான சாலையில் வசிக்கும் வீரமணிக்கு வயது 39. பிறவிலேயே கேட்கும், பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி. அப்பா பெயர் சேகர். அசோக் லேலண்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அம்மா விஜயலட்சுமி இல்லத்தரசி. வீரமணி ஒரே மகன்.
அவருடைய நண்பர் வார்த்தைகளைப் பெயர்க்க, வீரமணியிடம் பேசினோம்.
"பிறவியிலேயே பேச்சும் கேட்கும் திறனும் பறிபோனாலும் எப்பவும் நான் அதை ஒரு குறையா நினைச்சதில்லை. 5வது வரைக்கும் அடையாறு பால வித்யாலயா பள்ளியில படிச்சேன்.
கேட்கும் திறனற்றவர்களுக்கான சிறப்புப்பள்ளி. அங்கே கொடுத்த ஸ்பீச்தெரபி ஓரளவுக்கு பேசும் திறனையும், மத்தவங்களோட வாய் அசைவை வைத்து என்ன பேசுறாங்கன்னு கணிக்கிற திறனையும் கொடுத்துச்சு.
அதுக்குப்பிறகு, நார்மலான மாணவர்கள் படிக்கிற ஸ்கூல்லயே படிக்கனும்ன்னு முடிவு செஞ்சேன். அதுல பல சவால்கள் இருந்துச்சு. ஆனாலும், எல்லாத்தையும் வெற்றிகரமா கடந்தேன்.
ஸ்கூலைப் பொறுத்தவரை விவரம் தெரியாத சில ஸ்டூடண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க. அதையெல்லாம் காதுலயே வாங்கிக்க மாட்டேன். பிளஸ் 1, பிளஸ் 2 ராமசாமி முதலியார் ஸ்கூல்ல படிச்சேன்.
பிளஸ் டூவில ஆவரேஜ் மார்க். ஆனா, கல்லூரிகள்ல இடம் கிடைக்கலே. வீட்டிலிருந்தபடியே சென்னைப் பல்கலைக்கழகத்துல பிகாம் சேர்ந்தேன்.
அப்பா ரிட்டையர் ஆகிட்டார். என்னோட வருமானம் அவசியமா இருந்துச்சு. பகுதி நேரமா. ஒரு நிறுவனத்தில டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை செஞ்சுக்கிட்டே படிச்சு முடிச்சேன்.
படிப்பு முடிஞ்சதும் ஒரு பிபிஓவுல வேலை கிடைச்சுச்சு. நல்ல நண்பர்கள், நல்ல மேல் அதிகாரிகள்ன்னு மிகச்சிறந்த சூழல் அமைஞ்சது. அங்கே நடக்குற கல்ச்சுரல்ஸ்ல டான்ஸ் ஆடி எல்லோரையும் சிரிக்க வைப்பேன்.
ஆபீஸ்ல நடந்த ஒரு நிகழ்ச்சியில ஒரு பையன் மைம் ப்ரோகிராம் செஞ்சார். அதுக்குப் பயங்கர ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. அதைப் பார்த்தவுடனே நாமும் அதுமாதிரி மைம் கத்துக்கனும்ன்னு ஆசை வந்துச்சு.
அந்தப்பையன்கிட்ட கேட்டேன்.
மைம் கோபி அண்ணாக்கிட்ட என்னை அறிமுகம் செஞ்சு வச்சார். அண்ணா, என்னை உடனடியா பயிற்சியில சேத்துக்கிட்டார். எனக்கிருந்த ஆர்வத்துல விறுவிறுன்னு கத்துக்கிட்டேன்.
கோபி அண்ணா கூட 30க்கும் மேற்பட்ட மேடைகள்ல மைம் டிராமா செஞ்சிருக்கேன். அதுமட்டுமில்லாம, ஆபீஸ்ல இப்போ ஹீரோவாகிட்டேன். எந்த புரோகிராமா இருந்தாலும் என் மைம் இருக்கும்.." என்று உற்சாகமாகப் பேசுகிறார் வீரமணி.
வீரமணி சாலைப் பாதுகாப்பு போராளியாக மாறியது தனிக்கதை. அதையும் அவருடைய சைகைமொழி மொழிபெயர்ப்பாகக் கேட்கலாம்.
“நாலு வருஷத்துக்கு முன்னால என் மகளோட பைக்ல போய்க்கிட்டிருந்தேன். அப்போ ஒரு பையன், பைக்ல வேகமா வந்து எங்களை மோதிட்டார்.
அவர் மோதின வேகத்துல என் மகள் கீழ விழப்போக, பைக்கைக் கன்ட்ரோல் பண்றதை விட்டுட்டு என் மகளைப் புடிச்சேன்.
பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. எனக்குத்தான் அங்கங்க காயம். `குறைபாடு உள்ள நானே வண்டியை சரியா ஓட்டிட்டுப் போறேன். இவங்களுக்கு எல்லாம் நல்லாதானே இருக்கு.
ஏன் இப்படி ஓட்டுறாங்க?’னு ஆச்சர்யம்தான் வந்துச்சு. அன்னைக்குத்தான் முடிவு செஞ்சேன். சாலைப் பாதுகாப்பு பத்தி ஏதாவது செய்யனும்ன்னு. அதுக்கு பெரிய உதவியா இருக்கு மைம் என்று சிரிக்கிறார் வீரமணி.
சாலைப் பாதுகாப்புப் பணியில் இயங்கும் தோழன் அமைப்பில் இணைந்து செயல்படுகிறார் வீரமணி. வார விடுமுறை நாட்களில் முக்கியமான சாலைச் சந்திப்புகளில் மைம் மற்றும் கழுத்தில் ஒரு அட்டையோடு களத்தில் இறங்கி விடுகிறார்.
சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நான்கைந்து மணி நேரம் மக்களோடு கலந்துரையாடுவார். முறையாக ஹெல்மேட் போட்டு வருபவர்களை வணங்கி நன்றி தெரிவிக்கிறார். மொபைல் போனில் பேசியபடி வருபவர்களிடம் விளைவுகளை சைகை மொழியால் சொல்லி எச்சரிக்கிறார்.
பாட்டுக் கேட்டபடி வருபவர்களின் காதுகளில் இருந்து ஹெட்போனைக் கழட்டி விட்டு கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“சிலபேர் பாராட்டுவாங்க. சிலபேர் திட்டுவாங்க. அடிக்கக்கூட வருவாங்க. ஆனா, எதையும் நான் கண்டுக்கிறதில்லை.
நான் பேசுறதெல்லாமே அவங்களுக்காக. அவங்க உயிருக்காக... குடும்பத்துக்காக... நான் பாட்டுக்கு என் வேலையைப் பாத்துக்கிட்டே இருப்பேன்.
அடுத்த வாரத்துல இருந்து அம்பத்தூர்ல இந்த வேலையை ஆரம்பிக்கப்போறேன்,.." என்று சொல்லி விடைகொடுக்கிறார் வீரமணி.
இந்தியாவிலேயே அதிக விபத்துகளைச் சந்திக்கும் மாநிலம் தமிழ்நாடு. நகரம், சென்னை. தம் கலையை சாலைப் பாதுகாப்புக்கென அர்ப்பணித்து நேரம் காலம் பார்க்காமல் தெருவில் இறங்கி தன்னை வருத்தி அறிவுரை சொல்லி வழிகாட்டும் வீரமணியை பாராட்டுகிறது டவுன்நியூஸ்.
நீங்களும் பாராட்டலாமே...? 9841975475