05/10/2023
மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில் 16-09-2023 அன்று மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையினர் நடத்திய நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், செந்தமிழாக பத்ததி உருவாக்கி 40 ஆண்டுகளுக்கு மேலாக அருந்தமிழ் வழிபாட்டுப் பணி ஆற்றிவரும் ஆகம அறிஞர் முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் பணியைப் பாராட்டும் விதமாக அவரது தபால் தலை வெளியிடப்பட்டது.
தமிழ் வழிபாட்டுப் பணிக்காக வெளிநாட்டில் தபால் தலை வெளியிடப்பட்டு அங்கீகாரம் பெறுவது என்பது வரலாற்றில் இவர் ஒருவரே என்பதால் சென்னையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் உந்துதலால் 02-10-2023 அன்று சென்னை ICFல் உள்ள அ/மி கமல விநாயகர் சத்சங்கம், அரங்கில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்பமை நீதியரசர் உயர்திரு A.K.இராஜன் அவர்கள் தலைமை ஏற்க, தொழிலதிபர் திரு.C.தம்பிக் கலைஞன், இந்தியா பில்டர்ஸ் தொடக்கவுரை ஆற்ற, மூத்த வழக்கறிஞர், திரு.சிகரம் எஸ். செந்தில்நாதன், ஊடகவியலாளர் “தமிழ்க்கேள்வி” திரு.செந்தில்வேல், தி டைம்ஸ் குழுமம் மேலாளர் திரு.எஸ். மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி முழுவதையும் “வாரியாரின் பேரன்” திரு.ச.திருச்சுடர் நம்பி, அவர்கள் இணைப்புரை வழங்கினார், முன்னதாக திரு.எஸ்.நாகரத்தினம் வரவேற்புரை வழங்க, திரு.மா.கருப்புசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நீதியரசர் A.K.இராஜன் அவர்கள், தனது உரையில் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கமிட்டியின் ஆய்வறிக்கையில் உள்ள பல விஷயங்கள் சத்தியவேல் முருகனாரிடம் பெற்ற செய்திகளின் அடிப்படையிலேயே வழங்கி இருந்தேன். அந்த அறிக்கைக்கு பெரும் பங்கு ஆற்றியவர் இவர். இந்த தபால் தலை என்பது மலேசிய நாட்டில் வழங்கியது மட்டுமல்லாமல் இந்திய நாட்டிலும் தேசிய அளவில் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிடவேண்டும்” என்று பேசினார்.
Thiruchudar Nambi