18/06/2026
திருவாரூரில் நீட் தேர்வினால் கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டும் - நீட் தேர்வை ரத்து செய்யும் வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி போராட்டம் - கைது!
ஜுலை - 18, திருவாரூரில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் கோவையில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று தற்கொலை செய்து கொண்ட கோவைபுதூர் மாணவி அனு கீர்த்தனா அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ஒட்டுமொத்த ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் இரயில் நிலையத்தினை முற்றுகையிட சென்ற தோழர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையிலேயே அமர்ந்து நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அனிதா முதல் கோவை மாணவி கீர்த்தனா வரையிலான மாணவர்களின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு. இளமாறன், மாநில திராவிட மாணவர் கழகத் துணை செயலாளர் தேவ.நர்மதா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் ரவிகுமார், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவு சுடர், திராவிட மாணவர் கழக இதழ்மொழி, இளைஞரணி செயலாளர் தமிழவன், மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் அழகேசன், இளைஞரணி தோழர் மனோஜ், திருத்துறைபூண்டி நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் மோகன், திருவாரூர் நகர துணை தலைவர் சுரேஷ், திராவிடர் கழகத் தோழர் சுரேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் வீரையன், கோவை மாநகர தலைவர் தி.க செந்தில்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு திருவாரூர் அழகிரி நகர் எதிரில் உள்ள U.P ஹாலில் வைக்கப்பட்டனர்.