AITUC Tamilnadu

AITUC Tamilnadu நன்று கருது! நாளெல்லாம் வினை செய்!!

ஒன்றிய, மாநில அரசுகளின்தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக    தொழிலாளர்,விவசாயிகள் சங்கங்கள்  செப்டம்ப...
21/08/2026

ஒன்றிய, மாநில அரசுகளின்
தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக
தொழிலாளர்,விவசாயிகள் சங்கங்கள்
செப்டம்பர் 6-12 வரை பரப்புரை வாரம்

20.08.2026

தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் 2026 ஆகஸ்ட் 20 அன்று சென்னையில் பல்லவன் இல்லம், விரைவு போக்குவரத்து கழக தொமுச அலுவலகத்தில் எச்எம்எஸ் தேசிய தலைவர் தோழர் க.அ.ராஜா ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள், கி.நடராசன், வி.வேலுசாமி, என்.தனசேகரன், பி.பன்னெர்செல்வம், ஜெ.விஜயகுமார், கி.சீனிவாசன், எம்.சண்முகம், எல்.பன்னீர்செல்வம், வி.மகேந்திரன், எஸ்.சுந்தரமூர்த்தி (தொமுச), ம.இராதாகிருஷ்ணன், (ஏஐடியுசி) கே.சி. கோபி குமார், எஸ்.ரேஜேந்திரன், (சிஐடியு) மு.சுப்ரமணியன், எம்.சுப்பிரமணிய பிள்ளை, பி.மோகந்தாஸ், எச்.கார்த்திக் (எச்எம்எஸ்) பி.சுகுமாறன் (ஐஎன்டியுசி) வி.சிவக்குமார், ஈ.சடையாண்டி (எஐயூடியூசி) சொ.இரணியப்பன், ஜி.முனுசாமி (ஏஐசிசிடியு) அ.சேக்கிழார் (யுடியுசி) எஸ்.மாயாண்டி (டியுசிசி), இரா. அந்திரிதாஸ், (எம்எல்எப்) ஆர்.சம்பத் (டபுள்யுபிடியுசி), க.பேரறிவாளன் (எல்எல்எஃப்) ஆகியோர் தொழிற்சங்கங்களின் சார்பிலும், கே.பாலகிருஷ்ணன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பிலும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10 அன்று மறியல் போராட்டத்தை எழுச்சிகரமான போராட்டமாக நடத்திட்ட அனைத்து தொழிற்சங்க, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கும், உற்சாகத்துடன் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு:

அடுத்த கட்டமாக தொழிலாளர்கள்–விவசாயிகள் கூட்டு மாநாடுகள், பலநாள் பெருந்திரள் அமர்வு (Mahapadav), பலநாள் நேரடி நடவடிக்கைகளுக்கான தேதி, காலம் குறித்து அகில இந்திய தலைமையில் இருந்து அறிவிக்கப்படும் போது நாம் வெற்றிகரமாக நடத்துவதற்கு தயாராக வேண்டும்.

2026 செப்டம்பர் 6-12 வரை பரப்புரை வாரம்:

நமது தொடர் போராட்டத்தின் முன் தயாரிப்பாக 2026 செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை உள்ள ஒரு வார காலத்தில் தொழிலாளர், விவசாயிகள் மாநாட்டின் கோரிக்கைகளோடு கீழ்க்கண்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் இணைத்து தொழிற்சங்கங்களும், விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து நகரங்களிலும், கிராமங்களிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆலை வாயில், தெருமுனை கூட்டங்கள், நடைபயணம்/இருசக்கர வாகன பரப்புரை உள்ளிட்ட சாத்தியமுள்ள வடிவங்களில் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கும் குறையாத நாட்கள் இந்த பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு கோரிக்கைகள்:

ஒன்றிய அரசே!
1. காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட, தமிழ்நாட்டின் பங்கை தர நடவடிக்கை எடு,
2. மேக தாது அணை கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசே அனுமதிக்காதே

தமிழ்நாடு அரசே!
1.ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்று
2.முடங்கியுள்ள முத்தரப்பு குழுக்களை விரைந்து அமைத்து செயல்படுத்து
3.ஒன்றிய அரசின் வழியில் பொதுத்துறை, பொது சேவைகளை தனியார்மயமாக்கும் அபாயகரமான கொள்கைகளை கைவிடு
4.போராடும் மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக், சிவில் சப்ளை, உள்ளாட்சி, மருத்துவம், திட்டப்பணியாளர் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த முறையை கைவிட்டு தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கைகள் மீது தீர்வுகாண்,
5.கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்
6.குறைந்தபட்ச ஊதிய அரசாணைகளை மறுவரையறை செய்து ரூ. 42,000 க்கு குறையாமல் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்து அமுலாக்கு
7.கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஒன்றிய அரசின் சட்டத்தால் முடங்கும் நிலையை தடுத்திடு
8.காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மேக தாது அணை கட்டுமானத்தை தடுக்க உரிய சட்ட போராட்டத்தின் மூலம் நடவடிக்கை எடு
9.விவசாய தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கும் விஜி-கிராம் ஜி திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசே விவசாய தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு 150 நாட்கள் வேலை வழங்கத் தக்க முழுமையான நிதி ஒதுக்கி, வேலைவழங்குவதை உறுதிசெய்
10. போராடும் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அடக்குமுறைகளை கைவிடு

மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு கூட்டங்கள் கூட்டி பரவலாக பல்வேறு மையங்களில் திட்டமிட்டு மேற்கண்ட கோரிக்கைகளையும் இணைத்து பரப்புரை நடத்தவும் நடந்த விவரங்களை மாநில தலைமைக்கு தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

தோழமைமிக்க,
LPF HMS AITUC CITU INTUC AIUTUC AICCTU UTUC WPTUC TUCC MLF LLF &

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM)

10/08/2026
பத்திரிகைச் செய்தி05.08.2026தமிழ்நாடு அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கை: தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர...
05/08/2026

பத்திரிகைச் செய்தி
05.08.2026

தமிழ்நாடு அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கை: தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியுள்ளது – ஏஐடியூசி

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டிற்கான முதல் முழு நிதிநிலை அறிக்கை தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளது. இது உழைக்கும் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் வர்க்கம் தீர்மானகரமான பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆனால் அவர்களின் வாழ்வாதாரம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் உறுதியான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இல்லை. ஒப்பந்த, அவுட்சோர்சிங் மற்றும் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் தொழிலாளர்களை படிப்படியாக நிரந்தரப்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், கிக் மற்றும் தள (Platform) தொழிலாளர்கள் ஆகியோருக்கு விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. தொழிலாளர் சட்டங்களை திறம்பட அமல்படுத்துதல், பெண்தொழிலாளர்களின் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் ஆகியவற்றிலும் பட்ஜெட் கவனம் செலுத்தவில்லை. மேலும், ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியையும் பட்ஜெட் வெளிப்படுத்தவில்லை.

2026–27 இடைக்கால பட்ஜெட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ₹1,996 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முழு பட்ஜெட்டில் அது ₹2,022 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வெறும் ₹26 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர் நலத் தேவைகளைக் கருத்தில் கொண்டால், இந்த உயர்வு போதுமானதாகக் கருத முடியாது.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்தன. புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்தப் பட்ஜெட்டில் எந்த உறுதியான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. தொழிலாளர்களுக்கு இந்தப் பட்ஜெட் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

எனவே, அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்புதல், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், அமைப்புசாரா மற்றும் கிக் தொழிலாளர்களுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பு வழங்குதல், தொழிலாளர் நலத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்துதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது.

ம. இராதாகிருஷ்ணன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஏஐடியூசி

ஒன்றிய, மாநில அரசுகளின்தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 10 அன்று     தொழிலாளர்,விவசாயிகள் மற...
03/08/2026

ஒன்றிய, மாநில அரசுகளின்
தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக

ஆகஸ்ட் 10 அன்று
தொழிலாளர்,விவசாயிகள் மறியல்!

03.08.2026

மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்துறை சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இணைந்து, 2026 ஜூலை 29 அன்று புதுடெல்லியில் இரண்டாவது தேசிய தொழிலாளர்கள்–விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் முடிவுகளை தமிழ்நாட்டில் அமுலாக்குவது தொடர்பான தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் 2026 ஆகஸ்ட் 3 அன்று சென்னையில் “கலைஞரகம்” தொமுச அலுவலகத்தில் தொமுச தலைவர் தோழர் கி.நடராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள், கோ.சி.வள்ளுவன், ஜெ.விஜயகுமார், இரா.பொன்னுராம், என்.தனசேகரன் (தொமுச), ம.இராதாகிருஷ்ணன், ஆர்.ஆறுமுகம், (ஏஐடியுசி) எஸ்.கண்ணன், க.திருச்செல்வன், எஸ்.கே.முருகேஷ் (சிஐடியு) எம்.சுப்பிரமணிய பிள்ளை, (எச்எம்எஸ்) பி.சுகுமாறன் (ஐஎன்டியுசி) வி.சிவக்குமார், ஈ.சடையாண்டி (எஐயூடியூசி) சொ.இரணியப்பன் (ஏஐசிசிடியு) கே.நாராயணமூர்த்தி (யுடியுசி) எஸ்.மாயாண்டி டியுசிசி, இரா. அந்திரிதாஸ், (எம்எல்எப்) கே.ராம்பாபு (டபுள்யுபிடியுசி), க.பேரறிவாளன் (எல்எல்எஃப்) ஆகியோர் தொழிற்சங்கங்களின் சார்பிலும், பி.எஸ்.மாசிலாமணி (ஏஐகேஎஸ்) அ.பாஸ்கர் (பிகேஎம்யு) சாமிநடராஜன் (ஏஐகேஎஸ்) மேரி லில்லிபாய், எஸ்.சுருளியாண்டவர் (ஏஐகேகேஎம்எஸ்) ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பிலும் பங்கேற்றனர்.

எச்எம்எஸ் தேசிய தலைவர் தோழர் க.அ.ராஜா ஸ்ரீதர் அவர்களின் வாழ்விணையர் சாந்தி அவர்கள் மறைவுக்கு கூட்டம் மவுன அஞ்சலி செலுத்தியது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஒன்றிய, மாநில அரசுகளின் ஒடுக்கு முறை நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். ஜென் Z இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேங்கியுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், முடங்கியுள்ள முத்தரப்பு குழுக்கள் , ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்து தெளிவுபடுத்தப்படாத தமிழ்நாடு அரசின் நிலை, கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஒன்றிய அரசின் சட்டத்தால் முடங்கும் நிலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் பிர்ச்சினைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்க்க முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெறவிருந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் பயணம் செய்த தமிழ்நாட்டின் விவசாயிகளை நடுவழியில் இறக்கிவிட்டு கைது செய்துள்ள ஒன்றிய, மகாராஷ்ர அரசுகளின் ஜனநாயக உரிமைக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உரிமை சட்டத்தை விஜி-கிராம் ஜி என்று பெயரை மாற்றியதோடு விவசாய தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கும் சட்டத்தை தமிழ்நாட்டில் ஏற்று அமுலாக்குவதாக அறிவித்ததோடல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் தொடர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். வேலையில்லாமல் விவசாய தொழிலாளர்களை தவிக்கவிடும் நடவடிக்கையை கைவிட்டு வேலை வழங்க வேண்டும்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு:

புதுடெல்லி தால்கடோரா அரங்கில் நடைபெற்ற தொழிலாளர்கள்– விவசாயிகளின் தேசிய மாநாடு, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட, போராட்டங்களை தீவிரப்படுத்துவதென முடிவு செய்து அறிவித்துள்ளது.

மாநாடு ஒருமனதாக விரிவான தீர்மானப் பிரகடனத்தை நிறைவேற்றியது. அதில்:
 நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் (Labour Codes) ரத்து செய்ய வேண்டும்.
 தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும்.
 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
 அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட ₹42,000 சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
 சி-2 செலவு + 50% அடிப்படையில் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் உறுதியான அரசுக் கொள்முதல் விலை வழங்க வேண்டும்.
 விவசாயி மற்றும் தொழிலாளர் விரோத வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) கைவிட வேண்டும்.
 தனியார்மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline 2.0) நிறுத்தப்பட வேண்டும்.
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
 சமூகப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
 பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
 பொதுவிநியோகத் திட்டம் (PDS) பாதுகாக்கப்பட வேண்டும்.
 அடக்குமுறைச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
 அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து

நாடு முழுவதும் தொழிலாளர்கள்–விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டங்களை தீவிரப்படுத்தவும் மாநாடு முடிவு செய்தது.

உடனடி நடவடிக்கையாக, 2026 ஆகஸ்ட் 10, "வெள்ளையனே வெளியேறு" (Quit India) இயக்க தினத்தை முன்னிட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல், சாலை மறியல், பணியிடப் போராட்டங்கள், மனிதச் சங்கிலி உள்ளிட்ட மக்கள் இயக்கங்களை நாடு முழுவதும் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், மாநில அளவிலான கூட்டு மாநாடுகள், பரவலாக்கப்பட்ட பெருந்திரள் அம்ர்வுகள் (Mahapadavs) மற்றும் அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்கத் தவறினால் மேலும் விரிவான நாடு தழுவிய நேரடி போராட்டங்களுக்கு தயாராகவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த மாநாடு, அதிகாரவாதப் போக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் அரசை எதிர்கொள்ள தொழிலாளர்–விவசாயி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற வலிமையான செய்தியை வழங்கியது.
சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும், தொழிலாளர்–விவசாயி ஒற்றுமையை மேலும் பலப்படுத்தவும், ஜனநாயக இயக்கங்களுடன் ஒற்றுமையை விரிவுபடுத்தவும் உறுதிமொழி ஏற்றது.

இதன்படி 2026 ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டங்களை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

உடனடியாக மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு கூட்டங்கள் கூட்டி பரவலாக பல்வேறு மையங்களில் மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தவும் நடந்த விவரங்களை மாநில தலைமைக்கு தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

தோழமைமிக்க,
LPF HMS AITUC CITU INTUC AIUTUC AICCTU UTUC WPTUC MLF LLF &
ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM)

திருச்சி வழக்கறிஞர் தோழர் பாலகிருஷ்ணன் காலமானார்செவ்வணக்கம் தோழர் பாலகிருஷ்ணன்ரானே, எம்ஆர்எப் உள்ளிட்ட பல்வேறு ஏஐடியூசி ...
03/08/2026

திருச்சி வழக்கறிஞர் தோழர் பாலகிருஷ்ணன் காலமானார்
செவ்வணக்கம் தோழர் பாலகிருஷ்ணன்
ரானே, எம்ஆர்எப் உள்ளிட்ட பல்வேறு ஏஐடியூசி சங்கங்களின் வழிகாட்டியாக, தொழிலாளி வர்க்கத்தின் வழக்கறிஞராக பணியாற்றிய உழைக்கும் மக்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த தோழர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன்.
இளம் வயதில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், ஏஐடியூசியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர்.
இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறவிருந்த எம்ஆர்எப் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தயாராகி கொண்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தோழர் பாலகிருஷ்ணன் மறைவு ஏஐடியூசி மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், அவரை இழந்து வாடும் வாழ்விணையர், அவரது குடும்பத்தினர், தோழர்கள், நண்பர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்நாடு ஏஐடியூசி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
செவ்வணக்கம் தோழர் பாலகிருஷ்ணன்.

ம. இராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஏஐடியூசி

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: மாணவர் – இளைஞர்களின் முதல் வெற்றிக்கு ஏஐடியூசி வாழ்த்துஇன்று (25.07.2...
25/07/2026

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: மாணவர் – இளைஞர்களின் முதல் வெற்றிக்கு ஏஐடியூசி வாழ்த்து

இன்று (25.07.2026) ஏஐடியூசி பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கல்வி அமைப்பில் நிலவிய ஊழலுக்கும், நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கும் அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்பை நிலைநாட்டும் வகையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை பெற்றுத் தந்த CJP இயக்கத்தினருக்கும், அவர்களுக்கு ஆதரவாகப் போராடிய அனைத்து மாணவர்–இளைஞர் அமைப்புகளுக்கும், பொதுவாக நாடு முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்–இளைஞர்களுக்கும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டியது, சீரழிந்து வரும் கல்வி அமைப்பை முழுமையாக மறுஆய்வு செய்வதிலும், பிற்போக்குத்தனமான புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP), பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புத் தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதிலும் இருக்க வேண்டும். நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவும் சூழலில் இது மிகவும் அவசியமானதாகும்.

இந்தப் போராட்டம், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களிடம் பொறுப்புக்கூற வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படை நெறி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கருத்து தெரிவிக்கும் உரிமை, மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட உரிமை ஆகிய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

இந்த தலைமுறை (Gen Z) முன்னெடுத்த போராட்டத்தை "தேசவிரோதம்", "அராஜகம்", "வெளிநாட்டு நிதியுதவி பெற்றது" என்று அவதூறு பரப்ப அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் அரசாங்கத்திற்கே எதிராகத் திரும்பின. போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட கொடூரமான காவல்துறை அடக்குமுறைகள்—பெல்லட் துப்பாக்கிகள், மின்அதிர்ச்சி தடியடிகள் உள்ளிட்ட வன்முறை, மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக குற்றவழக்குகள் பதிவு செய்தல், பல்கலைக்கழக நிர்வாகங்கள் மூலம் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் நோக்கில் நோட்டீஸ்கள் அனுப்புதல்—ஆகிய அனைத்தும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.

ஆனால், ஜனநாயகத்தில் உண்மையைப் பேசுவதற்கான அச்சத்திற்கு இடமில்லை என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு காரணமாக தங்கள் பிள்ளைகளை இழந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றவழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஏஐடியூசி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயகமே இந்தியாவின் முதுகெலும்பாகும். இந்தப் போராட்டம் எழுப்பிய மகத்தான முழக்கம், கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு மீண்டும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

25.07.2026

20 ஜூலை 2026மாணவர்–இளைஞர்களின் மாபெரும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு ஏஐடியூசி பாராட்டுபோராட்டக்காரர்கள் மீது நட...
20/07/2026

20 ஜூலை 2026
மாணவர்–இளைஞர்களின் மாபெரும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு ஏஐடியூசி பாராட்டு

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்

– ஏஐடியூசி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் அறிக்கை

இன்று (20.07.2026) நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர்–இளைஞர் பேரணியில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தன்னெழுச்சியுடன் திரண்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்ற மாணவர்–இளைஞர்களுக்கு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி) சார்பிலும், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் சார்பிலும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் புரட்சிகரமான பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தின் பின்னணியில், CJP மற்றும் இதர மாணவர்–இளைஞர் அமைப்புகள் விடுத்த அழைப்பை ஏற்று, ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், டால்ஸ்டாய் மார்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களும் இளைஞர்களும் பெருந்திரளாகக் குவிந்துள்ளனர். இது இந்திய இளைஞர் சமூகத்தின் ஆழமான வேதனையையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவாகும்.

நாட்டின் கல்வி அமைப்பு இன்று ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. உயர்கல்வி சேர்க்கை முதல் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் வரை, தேர்வு முறைகள் நம்பகத்தன்மையை இழந்து விட்டன. தேர்வுத் தாள் கசிவுகள், முறைகேடுகள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றன. அதே நேரத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதால், கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை நிச்சயமற்ற இருளில் தள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கொந்தளிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த புகழ்பெற்ற கல்வியாளரும் விஞ்ஞானியுமான சோனம் வாங்சுக் அவர்கள், போராட்ட இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி ஊழல்களின் விளைவாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள சூழலில், மாணவர்–இளைஞர்களின் கோபம் நியாயமானதும் தவிர்க்க முடியாததுமாகும்.

இந்த மாபெரும் எழுச்சி, நாட்டின் மாணவர்–இளைஞர்களின் குரலை இனியும் ஆட்சியாளர்கள் புறக்கணிக்க முடியாது என்பதற்கான மிக வலுவான அரசியல் எச்சரிக்கையாகும்.

மத்திய பாஜக அரசு, நாட்டின் உழைக்கும் மக்களின் நலன்களைப் புறக்கணித்து, அதானி–அம்பானி உள்ளிட்ட சில பெரு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாகவே செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சமரசம் செய்து வருகிறது.

இதற்கு எதிராக தொழிற்சங்கங்களும், விவசாயிகள் இயக்கங்களும் நீண்டகாலமாகத் தொடர்ந்து போராடி வருகின்றன.
நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், வெளிப்படையான தேர்வு முறைக்காகவும், வேலைவாய்ப்பு உரிமைக்காகவும் மாணவர்–இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த எழுச்சி, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் முக்கியமான முன்னேற்றமாகும். தொழிலாளி வர்க்கமும் மாணவர்–இளைஞர் சமூகமும் இணைந்து போராடும்போது மட்டுமே மக்கள் விரோதக் கொள்கைகளை தோற்கடிக்க முடியும்.

இதற்கிடையில், அமைதியான முறையில் போராடிய மாணவர்–இளைஞர்கள் மீது காவல்துறை நடத்தியுள்ள கொடூரமான தடியடி தாக்குதலை ஏஐடியூசி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்காக அரசின் அடக்குமுறைக் கருவிகளைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. மக்களின் நியாயமான குரலை தடியடியாலும் அடக்குமுறையாலும் மௌனமாக்க முடியாது.

இந்த அடக்குமுறை, நீதிக்கான போராட்டத்தையும், சமத்துவம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் உரிமை, மேலும் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், மொழிகள் மற்றும் மத நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கங்களையும் மேலும் வலுப்படுத்தும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த நீதிப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி அறைகூவல் விடுக்கிறது.

பாலியல் வன்முறை போதை கலாச்சாரம் சாதி மதவெறி இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்துக்கு ஆதரவாக நான் கையெழுத்து இடுகிறேன். நீங்க...
16/07/2026

பாலியல் வன்முறை போதை கலாச்சாரம் சாதி மதவெறி இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்துக்கு ஆதரவாக நான் கையெழுத்து இடுகிறேன். நீங்களும் கையெழுத்து இடுங்கள்.

தோழர்கள் அனைவரும் ஆன்லைன் படிவத்தில் கையெழுத்திட்டு ஸ்கிரீன் ஷாட் பகிரவும்.

https://aiyftamilnadu.great-site.net/

ஆன்லைனில் கையெழுத்திட!

பாலியல் வன்முறை போதை கலாச்சாரம் சாதி மதவெறி இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது.இத்தகைய மாபெரும் இயக்கத்தில் அனைவரும் இணைவோம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) - தமிழ்நாடு மாநில குழு

வீர வணக்கம்!தோழர் ஜகதீஷ் பாரத்வாஜ் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு AITUC ஆழ்ந்த இரங்கல்வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்க...
05/07/2026

வீர வணக்கம்!

தோழர் ஜகதீஷ் பாரத்வாஜ் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு AITUC ஆழ்ந்த இரங்கல்

வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடிய, இமாச்சலப் பிரதேச AITUC மாநிலத் தலைவர் மற்றும் AITUC தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரான தோழர் ஜகதீஷ் பாரத்வாஜ் அவர்கள் மறைவுற்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதிலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், AITUC-வின் கொள்கைகளையும் போராட்ட மரபுகளையும் முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இமாச்சலப் பிரதேச AITUC தோழர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர் இயக்கத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தோழர் ஜகதீஷ் பாரத்வாஜ் அவர்களின் நினைவிற்கு தமிழ்நாடு AITUC வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

Address

KTK Thangamani Illam, 2/1, Kovur Vaithiyanatham Street , Chinthadripet, Chennai/
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when AITUC Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AITUC Tamilnadu:

Shortcuts

Share