09/09/2026
போதையில்லா தமிழ்நாடு – சிறப்பு இளைஞர் சந்திப்பு
இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
“போதையில்லா தமிழ்நாடு” பரப்புரையை முன்னிட்டு, இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25.08.2026 அன்று சிறப்பு இளைஞர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு. முகமது ரியாஸ், உதவி காவல் ஆணையர் பி. சிதம்பரமுருகேசன், மருத்துவர் ஜெ. முஹைதீன், ரெஹோபோத் போதைமீட்பு ஆலோசனை மைய நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் டேனியல், நெக்சஸ் பிஆர் நிறுவன CEO பி. இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போதை – தனிநபர் பிரச்சினை மட்டுமல்ல!
போதை என்பது ஒரு தனிநபரை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. அது குடும்பம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் மிகப்பெரிய சவால் என நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
“ஒரே ஒரு முறை முயற்சி செய்தால் ஒன்றும் ஆகாது” என்ற தவறான எண்ணத்திலிருந்து இளைஞர்கள் முற்றிலும் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சமூக அழுத்தங்களும் போதைப்பழக்கமும்
உதவி காவல் ஆணையர் பி. சிதம்பரமுருகேசன், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அழுத்தங்கள் மற்றும் அவை போதைப்பழக்கத்திற்கு எவ்வாறு வழிவகுக்கின்றன என்பது குறித்து விளக்கினார்.
மேலும், சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
போதையின் உடல் மற்றும் மனநல பாதிப்புகள்
மருத்துவர் ஜெ. முஹைதீன் தலைமையில் நடைபெற்ற கேள்வி–பதில் நிகழ்வில், போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், அடிமைத்தன்மை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மீண்டு வர முடியும்!
தனது சொந்த போதைமீட்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ரெஹோபோத் போதைமீட்பு ஆலோசனை மைய நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் டேனியல், சரியான உதவியும் முறையான சிகிச்சையும் கிடைத்தால் போதைப்பழக்கத்தில் சிக்கியவர்களும் மீண்டும் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து “ONE TIME” விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் அனைவரும் “போதையில்லா தமிழ்நாடு” உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ச்சியான சமூக இயக்கமாக உருவெடுக்க வேண்டும்!