07/11/2026
உடனடி வெளியீட்டிற்காக.
ஜூலை 10, 2026 - கனடா.
கனேடியத் தமிழர் பேரவையின் நேர்மறையான மாற்றமும் உலகலாவிய ஈழத்தமிழர்களின் வெற்றியும்..!
கனேடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress - CTC) நேற்று (ஜூலை 09, 2026) ஒரு காத்திரமான அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் நான்கு விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளனர், அவையாவன; நிதிநிலை வெளிப்படைத்தன்மை, பரந்தளவிலான உறுப்பினர்களை உள்ளடக்கிய மக்கள் ஆணை, வலுவான தலைமைத்துவம், மக்களுக்காக சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் உறுதியாகக் குரல் கொடுத்தல்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை கனேடியத் தமிழர் கூட்டும் கனேடியத் தமிழர் பேரவையும் ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டனர். தமது அறிக்கையில் குறிப்பிட்டதை மீளுறுதிப்படுத்திய கனேடியத் தமிழர் பேரவை, மேலதிகமாக எமக்கு நடந்தது தமிழினவழிப்பு என்பதில் இருந்து எப்போதும் தாம் பின்வாங்கப்போவதில்லை என்று கூறியதுடன் ஈழத்தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் தேசிய வேணவாவில் இருந்து தாம் ஒருபோதும் விலகப் போவதில்லை என்பதையும் உறுதிபடக் கூறினர்.
இந்த மாற்றம் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் வந்த வெற்றி என்பதை கூறிக்கொள்கிறோம். தமது தொடர் செயற்பாடுகளால் கனேடியத் தமிழர் பேரவையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மக்கள் கொண்டு வந்துள்ளனர். கனேடியத் தமிழர் பேரவையின் இந்த மாற்றத்தை நாம் வரவேற்பதோடு தாம் உறுதியளித்ததுபோல் அவர்கள் செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த வரலாற்றுப் படிப்பினையை ஏனைய தமிழ் அமைப்புகளும் புரிந்துகொண்டு நேர்மை, பொறுப்புக்கூறல், ஒற்றுமை மற்றும் எமது கூட்டு அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் எமது மக்களின் நலனுக்காக சமரசமின்றி பயணிக்க வேண்டும்.
இன்று, தொடர்ச்சியான இனவழிப்பால் எமது தாயகம் முன்னெற்போதும் இல்லாத வகையில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கு உட்பட்டு எமது நிலங்கள் சிறிலங்கா அரசினால் அபகரிக்கப்படுகின்றன. செம்மணி புதைகுழிகளின் அகழ்வில் 412 மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, ஆனாலும் வழமைபோல் நீதி மறுக்கப்பட்டுள்ளது. பயங்கவாதத்தடைச்சட்டமும் ஏனைய சட்டங்களும் ஈழத்தமிழர்களை மீண்டும் மீண்டும் குறிவைக்கின்றன.
மக்களின் விடுதலைக்காவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் புலம்பெயர் தேசத்தில் தமிழ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த காலப்பகுதியில் தமது தன்னலங்களை மறந்து எமது மக்களின் விடுதலையையும் நலன்களையும் முன்னிலைப்படுத்தி புலம்பெயர் அமைப்புகளை ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
கனேடியத் தமிழர் கூட்டு.
[email protected]