06/07/2026
560-க்கும் மேற்பட்ட காணிப் பிரச்சினைகள் தீர்வு : 17 மாவட்டங்களை உள்ளடக்கிய சட்ட மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவு
நூருல் ஹுதா உமர்
டிட்வா (Ditwah) மீள்குடியேற்றத் திட்டங்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாக நீண்டகாலமாக நிலவிய 560-க்கும் மேற்பட்ட காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 17 மாவட்டங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட சட்ட மருத்துவ (Law Clinic) வேலைத்திட்டம் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்வுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்த காணி உரிமை, எல்லை நிர்ணயம், ஆவணக் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நீண்டகால பிரச்சினைகள் இத்திட்டத்தின் ஊடாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வுக்குட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறைவு நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆட்சி மற்றும் கொள்கைப் பிரிவுத் தலைவரான சந்திரிக்கா கருணாரத்ன (Chandrika Karunaratna) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும், வேலைத்திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைக்கு பங்களிப்பு வழங்கிய வளவாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தும் நோக்கம் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் இத்திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் தர அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட முக்கிய பதவிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.