28/07/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
காவல்துறை தலைவர் (DGP), தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், உள்துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர்
மாண்புமிகு ஐயா,
கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், தென்னிலை பகுதியில் 18.07.2026 (சனிக்கிழமை) மாலை சுமார் 5.00 மணி அளவில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. விமல்ராஜ் அவர்கள் தலைமையில், புகலூர் வட்டாட்சியர் திரு. சத்தியமூர்த்தி, தென்னிலை குறுவட்ட ஆய்வாளர் (RI) திருமதி விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) திருமதி ராதா, திரு. கார்த்திகேயன் மற்றும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசுப் பணியாளர்கள் மீது லஞ்ச புகார் அளித்து வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
அந்த நேரத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தென்னிலை காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. ஓம் பிரகாஷ் அவர்களிடம், ஒரு பொதுமகன், "VAO ராதா, RI விஜயலட்சுமி, வட்டாட்சியர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் தன்னிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்" என்று பொதுமக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
அந்த புகாரை சட்டப்படி பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டிய காவல் அதிகாரி, தனது கடமையை நிறைவேற்றாமல், புகார் தெரிவித்த நபரை மிகுந்த ஆவேசத்துடன், மனித மரியாதைக்கு எதிரான வார்த்தைகளால் திட்டியதுடன், பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் பலமாக அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் பின்வருமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது:
"உன்னை தொலைத்துக் கட்டிவிடுவேன்...",
"கஞ்சா வழக்கில் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்...",
"இன்றைக்குத்தான் ஒருத்தனை பொய் வழக்கில் உள்ளே போட்டேன்...",
"உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துக்கொண்டு போ...",
"அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா என்று கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது..."
என பல்வேறு அவதூறான, தரக்குறைவான, அச்சுறுத்தும் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதுடன், உடல் ரீதியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஒரு காவல் ஆய்வாளர், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய நிலையில், பொதுமக்களின் புகாரை ஏற்காமல், மாறாக புகார் அளித்த நபரையே தாக்கி, பொய் வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரான மிகக் கடுமையான அதிகார துஷ்பிரயோகமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில், பொதுமக்கள் ஊழல் குறித்து கேள்வி கேட்பதும், புகார் அளிப்பதும் சட்டபூர்வமான உரிமையாகும். அந்த உரிமையை ஒடுக்குவதற்காக காவல்துறை அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டுவது, தாக்குவது மற்றும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக அச்சுறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு,
தென்னிலை காவல் நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. ஓம் பிரகாஷ் மீது உரிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும்.
சம்பவத்தில் இருந்த அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
சம்பவ இடத்தில் உள்ள காட்சிகள், காணொளிகள் மற்றும் மொபைல் பதிவு ஆதாரங்களை உடனடியாக பாதுகாத்து கைப்பற்ற வேண்டும்.
விசாரணை காலத்தில் அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து, விசாரணையில் தலையீடு செய்ய முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் மீது முன்பே பெறப்பட்டுள்ள லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்து புகார்களையும் ஒருங்கிணைத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரை அரசுப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கி, இனிமேல் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாதவாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
மாண்புமிகு அவர்களின் தலையீட்டின் மூலம், இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
தமிழக விவசாய சங்கம்
கரூர் மாவட்டம், தமிழ்நாடு. Tamil Nadu Police Actor Vijay